இயக்குநர் பாலசந்தரின் ‘இருகோடுகள்’ பட பாலிசியைப் போல ஊடகங்களைக் கவனிக்க வைக்கும் விதத்திலான பரபரப்பு பேச்சில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கும், இந்நாள் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் போட்டியே நடக்கும்போல் இருக்கிறது.
திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்தவரான நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கள், அண்ணாமலையின் பேச்சைவிட பண்பட்டதாக இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர் பொதுமேடையில் பேசியதாக ஒரு வீடியோ பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அப்படி என்ன பேசி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்?
இங்கு தெய்வங்களைப் பற்றி யார் பேசினாலும், அவர்கள் உயிரோடு வாழக்கூடாது என்கிற விதத்தில், கடுமையான தொனியில் அவர் பேசியதுடன் கவிஞர் வைரமுத்துவையும் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக தீவிரமாக பேசியபோது எதிரே கூட்டத்திலிருந்த ஒருவர் வைரமுத்துவிற்கு எதிராக மிகக் கடுமையான அளவில் எதிர்ப்பேச்சை வீசுகிறார்.
இந்தப் பேச்சு தான் இரு நாட்களாக வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட பேச்சை பொதுவெளியில் அதிலும் வன்முறையைத் தூண்டுகிறபடி பேசியது எந்த அளவில் ஆரோக்யமான அரசியலுக்கு வழி வகுக்கும்.
அண்ணாமலையின் இடத்தை இப்படிப்பட்ட பேச்சின் மூலமாகவா நயினார் நாகேந்திரன் நிரப்ப வேண்டும்.
பொதுவெளியில் தற்போது பரபரப்பாக வைரலாகிக் கொண்டிருக்கும் நயினார் நாகேந்திரனின் பேச்சு எப்போது எந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது? இந்தப் பேச்சு அசலானதுதானா? என்பதையெல்லாம் நயினார் நாகேந்திரன்தான் விளக்க வேண்டும்.
– எச். ஜான் ஆப்ரகாம்