அமித்ஷாவின் தமிழக வருகையும் சில பின்விளைவுகளும்!

கடந்த இரண்டு நாட்களாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சென்னைக்கு வருகை தந்திருப்பது குறித்த பல்வேறு செய்திகள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிதாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

அமித்ஷாவின் வருகை ஏன் இந்த அளவிற்குப் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுகொண்டிருக்கிறது? இதற்கான பின்னணி தான் என்ன?

அண்மையில் தான் உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு சட்டரீதியாக வைத்த குட்டு குறித்த செய்திகள் கொஞ்சம் ஓய்ந்த நிலையில், அதை மடைமாற்றும் வகையில், அமித்ஷாவின் வருகை அமைந்திருக்கின்றது.

அமித்ஷா வருவதற்கு முன்பே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனைகள் துவங்கிவிட்டன.

மூத்த அமைச்சரான கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் மகன் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வழக்கம் போல சோதனையின் முடிவாக கண்டெடுக்கப்பட்டது என்ன என்பது வெளிப்படுத்தாத நிலையில், சோதனைகள் நிறைவடைந்திருக்கின்றன.

தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் இதே மாதிரியான சோதனைகள் நடந்திருக்கின்றன.

மிக அண்மையில்தான் டாஸ்மாக் நிறுவனத்திற்குள் அமலாக்கத்துறை புகுந்து அதிரடி சோதனை நடத்தி, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.

இதற்கெல்லாம் பல மாதங்களுக்கு முன்பே, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது போதைப் பொருள் கடத்தியதாக ஒரு வழக்குப் பதியப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டு, சிலர் மீது சந்தேக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையும் இந்த சமயத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அவராகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, விலக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு விண்ணப்பித்த ஒரே ஒரு நபராக நயினார் நாகேந்திரன் தேர்வாகி, மாநிலத் தலைவராகியிருக்கிறார்.

இதற்கு முன்பு தமிழக பாஜக தலைவராக யார், யார் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் அதன் பின் விளைவாக நல்ல பிரமோஷன் கிடைத்திருக்கிறது.

சிலர் மற்ற மாநிலங்களுக்கு ஆளுநராகப் பதவி உயர்வு பெற்று போயிருக்கிறார்கள்.

தமிழிசை துவங்கி இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் என்று இந்தப் பட்டியல் நீளும். இதற்கடுத்து சிலர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியதும் மத்திய அமைச்சராகவே புரமோஷன் பெற்றிருக்கிறார்கள்.

எல்.முருகனைத் தொடர்ந்து அப்படி மத்திய அமைச்சராக புரமோஷன் பெரும் நிலையில் தற்போது இருக்கிறார் அண்ணாமலை.

அவரும் ரஜினி பாணியில் இமயமலைக்குச் சென்று தியானம் செய்துவிட்டு, மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்து, இரண்டு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தி இருந்தார் அமித்ஷா.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி வழக்கம் போல மழுப்பலாக பதில் சொன்னாலும் உடனடியாக சமூகவலைத்தளத்தில் அதிமுக கூட்டணிக்கான வேலைகள் துவங்கியிருப்பதை உறுதிப்படுத்தி இருந்தார் அமித்ஷா.

அதன் பிறகு தமிழகத்திலும் சில மாறுதல்கள் நிகழ ஆரம்பித்தன. ஏற்கனவே குழம்பிப் போன குட்டையாக இருந்த அதிமுகவிற்குள், மேலும் பலதரப்பட்ட குழப்பங்கள்.

திடீரென்று செங்கோட்டையன் சில சந்திப்புகளின் மூலம் முக்கியத்துவம் பெற்றார்.

அந்தச் சந்திப்புகள் அவருடைய தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்தது என்று சொல்லப்பட்டாலும் ஊடகங்கள் அதற்கு கொடுத்த விளக்கங்கள் வேறு மாதிரி இருந்தன.

சென்ற தடவை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஓபிஎஸ், தற்போது சற்று ஒதுங்கி நிலையில் தனிக் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான ஒரு முடிவெடுத்துக் கட்சியின் பெயரையும் பட்டும்படாததுமாக அறிவித்திருக்கிறார்.

தற்போது, அமித்ஷா தமிழகத்திற்கு வந்தபோது அவருக்கு பல விஐபி தரப்பிலிருந்து விருந்துக்கான அழைப்புகள் வந்தன. அவற்றில் ஒன்று ஆடிட்டர் குருமூர்த்தியிடம் இருந்து வந்திருந்தது.

அவருடைய வீட்டில் அமைய இருக்கிற அதிமுக கூட்டணித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கே கூடி அமித்ஷாவுடன் உணவருந்தி, கூட்டணியை உறுதிப்படுத்துவது என்பதுதான் திட்டமாக இருந்தது.

ஆனால், மதியம் அமித்ஷாவுடன் விருந்து நடந்ததே ஒழிய, அன்றைய விருந்தில் கலந்து கொள்வதாக எதிர்பார்த்த அதிமுக கூட்டணித் தலைவர்கள் வழக்கம்போல ஆஜராகவில்லை.

மாறாக, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும் விருந்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் அமித்ஷாவுக்கு ஏற்பட்டது.

தமாக தலைவரான ஜிகே வாசன் போன்றவர்கள் வந்தாலும், அவர்களும் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுகவின் கூட்டணி குறித்து எந்த உறுதியான செய்தியையும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஏற்கனவே கடந்த முறை அண்ணாமலை பதவி ஏற்பிற்கு முன்பே டெல்லியில் பரீசலிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று நயினார் நாகேந்திரனுடையது.

சென்ற முறை மிக முக்கிய சில விஐபிகள் பரிந்துரை செய்ததன் மூலமாக, அண்ணாமலைக்கு அப்போது மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கியதாகச் சொல்லப்பட்டது.

தற்போதும் அவருடைய பொறுப்புக்கு எந்தவிதமான பழுதும் இல்லை. அவர் அவரளவுக்கு தேசிய அளவில் உயர்ந்திருக்கிறார்.

இனி, 2026 தேர்தலை தமிழகம் சந்திக்க இருக்கிற நிலையில், தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இந்நாள் பல தரப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இங்குள்ள நெல்லிக்காய் மூட்டை மாதிரி சிதறிக் கிடக்கும் அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேசி, அவர்களை தற்காலிகமாகவாவது ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.

அப்படி அந்த விதமான கூட்டணி உருவாகிற வரை தேசிய அளவிலிருந்து அவருக்கு பல்வேறு தரப்பட்ட பிரஷர்கள் தரப்படலாம்.

அதே சமயம் தற்போது தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களை முன்வைத்து, சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை பெரிதாக ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வரலாம்.

அதாவது, பாஜக ஆளாத மற்ற மாநிலங்களில் இதுவரை கடைபிடிக்கப்பட்ட அதே உத்தியை தமிழக சூழலிலும் நிறைவேற்றப்படலாம்.

எப்படியோ அமித்ஷாவின் வருகை அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிதாக பலன் கொடுத்துவிடவில்லை என்றாலும், திமுகவை எதிர்த்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஒரு சிறு விதையை ஊன்றி விட்டுச் சென்றிருக்கிறார்.

இவருடைய வருகையை ஊடகங்களும் வழக்கம்போல பெரிதுபடுத்தி, பரபரப்பான ஒன்றாக உருமாற்றி இருக்கின்றன. இதைத் தவிர இப்போதைக்கு இன்றைய நிலையில் வேறு எந்த விளைவுகளும் இல்லை என்பதை மட்டும் சொல்லலாம்.

– நா.லோகநாதன்

You might also like