கடல்களுக்கு அடியில் பல இடங்களில் பசும்புல்வெளிகள் இருக்கும். அந்த கடல் புல்வெளியில்தான் எத்தனை விதமான பாசிகள், கடற்புற்கள்?
இருபுறமும் அலகு கொண்ட நீளமான தோலாக்கு பாசி. கையில் எடுத்து பிழிந்தால் வழவழப்பான சாறு வழியும் தேன்பாசி. பவழக்கல் போல ஒரு முறுமுறு பாசி. நக்கிப் பார்த்தால் அந்த பாசி நாட்டுத்தக்காளி போன்ற சுவையுடன் இருக்கும்.
அந்த பாசியின் உருளை போன்ற அமைப்புக்குள்ளே தண்ணீர் இருக்கும். பாசியை எப்படி உருட்டினாலும் தண்ணீர் வடியாது. வெயிலில் மூன்று நாள்கள் காய வைத்தாலும் நீர் வற்றாது.
அடுத்ததாக சேமியா போல குச்சுகுச்சாக நீண்டிருக்கும் இனிப்புச் சுவையும், புளிப்புச் சுவையும் கொண்ட கோரைப் புல். கடற்புற்களில் சோளம், கோதுமைக் கதிர் போன்ற புற்களும் உண்டு. வாட்டாலை போன்ற பூக்கும் தாவரங்களும் உண்டு.
ஆவுளியாக்கள் மட்டுமல்ல ஆமைகளும் விதவிதமான இந்த கடற்புற்கள், தாவரங்களை பிதுனமாக விரும்பி மேயும்.
சரி. மேட்டருக்கு வருவோம்.
சௌதி அரேபிய அரசு, செங்கடல் பகுதியில் உள்ள கடற்புல்வெளிகளைக் கண்டுபிடித்து ஆராய, இதுவரை ஆலன் கொரால் அட்லஸ் எனப்படும் அதிதுல்லியமான செயற்கைக் கோள் படமெடுப்பு முறையைப் பயன்படுத்தி வந்தது.
விமானங்களில் சிறப்பு சென்சர்களைப் பொருத்தி கடல்மேல் பறந்து படமெடுத்தும் வந்தது.
பிறகு யார் சொன்ன யோசனையோ தெரியாது? கடற்கரைகளில் முட்டையிட்டு விட்டு திரும்பிப் போக இருந்த 53 பச்சை ஆமைகளைப் பிடித்து அவற்றின் கழுத்தில் டிரான்ஸ்மிட்டருடன் கூடிய ஓர் அடையாள வில்லையை சௌதி அரசு மாட்டி விட்டிருக்கிறது. அந்த வில்லை, செயற்கைக்கோளுடன் தொடர்புடைய வில்லை.
அந்த வகையில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, இந்த 53 கடல்ஆமைகள் மூலம், செங்கடலில் இதுவரை அறியப்படாமல் இருந்த 34 புதிய கடல் புல்வெளிகளை சௌதி அரேபிய அரசு கண்டுபிடித்திருக்கிறது.
அதன்மூலம், இதுவரை கண்டறியப்பட்ட கடல்புல்வெளிகளின் பரப்பளவு 13 விழுக்காடு இன்னும் உயர்ந்திருக்கிறதாம்.
பழங்காலத்தில், ஆமைகளைப் பின்தொடர்ந்து கடல் நீரோட்டங்களையும், புதிய நிலப்பரப்புகளையும் தமிழ் மாலுமிகள் கண்டுபிடித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், சௌதி அரேபிய அரசு ஆமைகளையும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து, நம் காலத்தில் இப்படி கடலடி பசும்புல்வெளிகளைக் கண்டுபிடித்து வருகிறது.
ஆமைகள் புத்தம் புதிய கடல் புல்வெளிகளுக்கு மேயச் செல்கின்றன. அதன்மூலம் புதுப்புது புல்வெளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஆமைகளின் கழுத்தில் கட்டிவிடப்படும் டிரான்ஸ்மிட்டர்களுக்கான செலவு மிகக்குறைவு.
ஆலன் கொரால் அட்லஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளுக்கு ஆகும் மொத்த செலவுடன் ஒப்பிடும்போது இது வெறும் ஒரு விழுக்காடு செலவுதானாம்.
உலகின் மழைக்காடுகளை விட அதிக அளவில் கரிக்காற்றை (கார்பன்) உறிஞ்சி வைத்துக் கொள்பவை கடலடி புல்வெளிகள்தான்.
அந்த வகையில் புவிக்கோளத்தின் சுற்றுச்சூழலில் கடலடி புல்வெளிகள் மிக முதன்மையானவை. தேவையானவை.
அவற்றைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் நிறைய தேவை. அந்த புல்வெளிகளைக் கண்டுபிடிக்க ஆமைகளின் சேவையும் தேவை.
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு