தென் மாநிலங்களுக்கு வழி காட்டத்தயாரான எம்.ஜி.ஆர்!

என்.டி.ஆர்., ஹெக்டே முன்பு சூளுரைத்தார்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனை அடுத்து அவருக்கு பல்வேறு இடங்களில் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.

தமிழக எம்.எல்.ஏ,க்கள் சென்னையில் பாராட்டு விழா நடத்தினர். அதில் பங்கேற்ற எம்.ஜி.ஆர். பேசியதன் சுருக்கம்:

‘ஒரு தாய், குழந்தையைப் பெற்றெடுத்ததும், அதனை பார்க்க வருவோரிடம் எல்லாம், ‘இது யாரைப்போல் இருக்கிறது –அப்பாவைப் போலவா? அல்லது தாத்தாவைப் போலவா? என்றெல்லாம் அபிப்பிராயம் கேட்டு பூரிப்படைவாள் – குழந்தையைக் காண வந்தவர்களைக் காட்டிலும் , பெற்ற தாயே பெருமகிழ்வு கொள்வாள்.

அதைப்போல் நீங்கள் என்னை பாராட்டி மகிழ்கிறீர்கள் – நான் முதலமைச்சராக இருக்கும் நேரத்தில் இது போன்ற பட்டங்களை வாங்கக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன் – முன் அனுபவம்தான் இதற்கு காரணம் – பாராட்டுகள் மகிழ்ச்சியைத் தந்தாலும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.

நல்லவர்கள் பாராட்டும்போது, தூற்றும் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதே அதற்கு காரணம் – எனது உடன்பிறப்புகள், என்னைப்பார்த்து, ‘இன்னும் நீ நடித்தால், உன்னை யாரும் மிஞ்ச முடியாது – நீ நடித்த படம் வசூலில் சாதனை ஏற்படுத்தும்‘ என்று கூறுகிறார்கள் –

அந்தப்புகழுடன் நான், அந்தத் துறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன் – அதுபோல் மக்கள், ‘நீ முதலமைச்சராக இருந்த நாடு எப்படி எல்லாம் இருந்தது‘ என்று பாராட்ட வேண்டும் – கடந்த காலத்தை மறக்காமல் நாம் எப்படி இருந்தோம் – எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் மிகப்பெரியது – அவற்றை நினைத்து நாம் அனைவரும் பாடுபட வேண்டும் – அதற்காக உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன்’ எனக்குறிப்பிட்டு, நன்றி சொல்லி முடித்தார், எம்ஜிஆர்.

டாக்டர் பட்டம் பெற்ற எம்.ஜி.ஆருக்கு சேலம் மாநகரில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. ஆந்திர முதலமைச்சர் என்.டிராமராவ், கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே உள்ளிட்டோருடன் சிவாஜி, பாக்யராஜ், ஹேமமாலினி போன்ற திரைப்பட நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் எம்.ஜி.ஆர்.ஆற்றிய உரை:

‘ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். அவர்கள் இங்கே பேசும்போது, என்னைப் பின்பற்றி நடப்பதாகச் சொன்னார் – நான் கொடுத்து வைத்தவன் – கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, அவர்கள் பேசும்போது, ’தென் மாநிலங்களுக்கு நான் முன்நின்று வழி காட்ட வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார்.

நான் வழிகாட்டத்தயார் – அதனை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாரா? நமது உறவால் எந்த மாநிலத்துக்கும் இழப்பு வரக்கூடாது – எந்த மாநிலத்துக்கும் பாதகம் இல்லாத வகையில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலு ஏற்படுத்தும் வகையில் அவரவர் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.

எங்களை பொறுத்தவரை, அண்ணாவின் கொள்கைகளில் இருந்து பிறழாத வகையில் முடிவெடுப்போம் – அதற்கு என்.டி.ஆரும், ஹெக்டேயும் ஒத்துழைத்தால் தலைமை ஏற்க நான் தயார்’ என அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். சூளுரை மேற்கொண்டார்.

– பாப்பாங்குளம் பாரதி

#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர். #என்_டிராமராவ் #அண்ணா #எம்ஜிஆர்  #டாக்டர்_எம்ஜிஆர்  #ராமகிருஷ்ண_ஹெக்டே #dr_mgr #puratchi_thalaivar #nt_ramarao #ntr #anna #mgr 

You might also like