1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும் ஒருவன்.
திண்டுக்கல் இடைத்தேர்தல் 1973 மே மாதம் 20-ம் தேதி நடந்தது. அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, பாலமேட்டின் பக்கத்தில் அலங்காநல்லூரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் மாணிக்கம்பட்டி என்ற ஊரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.
நான் அலங்காநல்லூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தேன். எனக்குத் தனியாக ஒரு கார் கொடுத்திருந்தார்கள். நான் சாயந்தரம் கிளம்பி ஏழு, எட்டுக் கூட்டங்களில் பேசிவிட்டு இரவு அலங்காநல்லூர் லாட்ஜுக்கு வந்து விடுவேன்.
மாணிக்கம்பட்டியில் ராத்திரி 11 மணிக்கு பொதுக் கூட்டத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். 40 – 50 பேர் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது திடீரென்று ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்றது. அந்தக் காரில் இருந்து காமராஜர் இறங்குவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. காரில் இருந்து இறங்கி நேராக மேடையில் வந்து உட்கார்ந்தார்.
காமராஜரை நான் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். மாநாடுகளில் தலைவர்கள் எல்லாம் வருவதற்கு முன் பேசி இருக்கிறேன்.
அதன் பின் பெருந்தலைவர் வந்து அமர்வார். சற்று தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். குமரி அனந்தன் அய்யாவோடு பல கூட்டங்களில் பேசி இருக்கிறேன்.
பெருந்தலைவர் நான் பேசும் கூட்டத்தில் அருகில் வந்து அமர்வார் என்று நான் நினைக்கவில்லை.
அவர் வந்து அமர்ந்த உடன் அவரது ஆட்சிகால சாதனைகள் அனைத்தையும் தொகுத்து கவிதை நடையில் அழகாகப் பேசினேன். அவர் என்னைப் பாராட்டுவார் என்று நினைத்து ஆக்கிரோசமாகப் பேசினேன்.
என்னைப் பாதியில் நிறுத்தி விட்டு மைக்கை வாங்கி பேசினார். மைக் செட் சரியாக வேலை செய்யவில்லை. மைக் செட் காரரைத் திட்டி விட்டு, ஒரு வழியாகப் பேசி முடித்தார்.
பிறகு என்னை விசாரித்தார். எந்த ஊர் என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதன்பிறகு எப்படி போகப் போகிறாய் என்று கேட்டார். எனக்கு கார் இருக்கிறது என்றேன்.
“உன் கார் பின்னால் வரட்டும், நீ என்னுடன் வா!” என்று சொல்லி தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்படி ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
காரில் போகும் போது என்னைப்பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அந்த இரவில் அவருடன் பயணித்த அந்த 20 நிமிட நேரப் பயணத்தில் என் வாழ்க்கை தலை கீழாக மாறியது.
அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? “இப்போது என்ன சுதந்திரப் போராட்டமா நடக்கிறது?” என்று கேட்டார்.
“உன்னை மாதிரி வயதில் இருக்கும் பத்தாவது படிக்கிற ஒருத்தன், எல்லா வேலையையும் விட்டுவிட்டு, ராத்திரி பதினொரு மணிக்கு மீட்டிங் பேச வேண்டிய தேவை என்ன?” என்று கேட்டார்.
அதற்கு நான், “உங்களால் ஈர்க்கப்பட்டு தான் தேர்தல் வேலை செய்கிறேன். என் தந்தை உங்களைப்பற்றி உங்கள் நேர்மையைப் பற்றிச் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தார்.” என்றேன்.
உடனே அவர், “உனக்கெல்லாம் கார் கொடுத்துக் கெடுத்து விட்டார்கள்” என்றார். பிறகு, “நாங்கள் எல்லாம் பள்ளியில் படிக்காமல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இப்போது சுதந்திரப் போராட்டமா நடக்கிறது? ஒரு இடைத்தேர்தல் தானே நடக்கிறது!” என்றார்.
பொதுவாக அந்த வயதில் நான் மேடையில் பேசினால் மாலை போட்டு, பொன்னாடை போர்த்தி, இவ்வளவு சின்னப்பையன் அருமையாகப் பேசுகிறானே என்று சந்தோஷப் படுவார்கள். ஆனால் அன்று என்னை பாராட்டாதது மட்டுமின்றி, திட்டிக் கொண்டே வந்தார்.
“உன்னைப் போன்றவர்களைத் தவறாக வழி நடத்தி விட்டோமோ என்று கவலைப்படுகிறேன்.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் என் முக வாட்டத்தைக் கவனித்தோ என்னவோ, திடீரென்று, “உனக்குப் பொது வாழ்க்கையில் அக்கறை இருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “ஆமாங்க அய்யா!” என்றேன். “அப்படியென்றால் ஒன்று செய். இந்த மாதிரி வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, நல்லா படிச்சி ஐஏஎஸ் எழுது. ஒரு கலெக்டர் ஆகிவிடு!” என்றார்.
அதன்பிறகு அவர் எப்படி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்பதை விளக்கினார்.
அப்போது நான் அரைக்கால் சட்டைப் போட்டிருந்த பையன். என்னைப் பார்த்து முதன்முதலாக ஐஏஎஸ் என்ற வார்த்தையை என் காதுகளில் உச்சரித்த ஒரே மனிதர் அவர்தான்.
இன்று வரை யோசித்து, யோசித்துப் பார்க்கிறேன். அவரைப் பற்றிப் பேசும்போது என் கண்களில் நீர் வந்துவிடக் கூடாதே என்று கட்டுப்பாடாகப் பேச முயற்சி செய்வேன்.
இன்று வரை நான் யோசித்து யோசித்துப் பார்ப்பதுண்டு. அவர் ஏன் அப்படி என்னிடம் சொன்னார்! அவர் என்னைப் பாராட்டவில்லை. நன்றாகப் பேசினேன் என்று சொல்லவில்லை. நான் பேச வந்ததற்காகக் கண்டித்தார்.
ஒரு சின்னஞ்சிறுவனிடம் ஐஏஎஸ் எழுதச் சொன்னார். அதன் பின் நான் வளர்ந்து, படித்து, முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன்.
அதுவும் பி.ஏ. தமிழ், எம்.ஏ. தமிழ் என்று தமிழ் இலக்கியம் படித்து ஐஏஎஸ் எழுதிய முதல் மாணவன் என்ற வரலாற்றைப் படைக்கக் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அவரது ஒற்றைச் சொல் தான் என்னை ஐஏஎஸ் அதிகாரி ஆக்கிற்று.
அலங்காநல்லூரில் நான் தங்கி இருந்த லாட்ஜின் முன்னால் ஒரு கால்வாய் மீது சின்ன பாலம் உண்டு. அந்த பாலத்தின் அருகில் கார் நின்றது.
“இங்கிருந்து நான் போய் விடுகிறேன் அய்யா!” என்றேன். என்னுடைய கார் பின்னால் வருகிறதா என்று சற்று நேரம் காத்திருந்து, கார் வருவதை உறுதிசெய்து கொண்டு, அதன் பிறகு புறப்பட்டுச் சென்றார்.
அவர் கார் சென்ற பின்பும், அந்த பிரமிப்பில் இருந்து மீளாதவனாக சற்று நேரம் நின்றிருந்தேன். என்னையே நம்ப முடியவில்லை.
காரில் வரும்போது திண்டுக்கல் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கூட என்னிடம் சொல்லி விட்டார். ஆனால் அதை நான் யாரிடமும் சொல்லவில்லை. அவருடனான எனது அந்த சந்திப்பு இன்று வரை என் வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
நன்றி: முகநூல் பதிவு