எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்திக்கப் போயிருந்தபோது ஒருமுறை தமிழ்மொழியைப் பற்றிப் பேச்சின் திசை திரும்பியது.
“அறிவு ஜீவிங்கிற சொல் மாதிரிச் சில சொற்கள் தமிழுக்கு உங்க மூலமாக வந்திருக்குன்னு சொல்லலாமா?” – என்று கேட்டதும் கர்ஜனையைப் போல அவர் பேச ஆரம்பித்தார்.
“தமிழ் எத்தனை வருஷத்துப் பழமையான மொழி. இப்போ இன்னைக்கு தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துறோமே! இந்தச் சொற்கள் ஒரே நாளில் முளைத்த சொற்களா? சொல்லுங்கள்.
எத்தனை ஆண்டுகளாக, எத்தனை பேர் இந்தச் சொற்களுக்கு இது தான் அர்த்தம்னு உருவாக்கியிருப்பாங்க? ஒரே பொருளுக்கு எத்தனை சொற்கள் தமிழ்லே இருக்கு?
அறிவுஜீவிங்கிற சொல்லுக்கு நான் எப்படி உரிமை கொண்டாட முடியும்? அறிவு என்கிற சொல்லும், ஜீவன், ஜீவிங்கிற சொற்களும் ஏற்கனவே இருந்தவை தானே! அந்தச் சொற்களை நான் இணைச்சதிலே என்ன பெருமை இருக்கு..
இன்னைக்கும் கிராமப்புறத்திலே “சீவன் செத்துப் போய்க் கிடக்கிறேன்” ன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க.. முன்னாடி அறிவாளின்னு சொல்லப்பட்ட வார்த்தை கொஞ்சம் பழசா இருந்ததாலே நான் அறிவுஜீவின்னு சொன்னேன். அவ்வளவு தான்.
தமிழில் அவ்வளவு சொற்கள் இருக்கே… இதுக்கு இன்னைக்கு வந்த நான் அதைப் பயன்படுத்திட்டு அதற்குக் காப்புரிமை கொண்டாட முடியுமா?
பாரதி அவர் காலத்தில் சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையா எத்தனை தமிழ்ச் சொற்களை உருவாக்கியிருக்கார்.. தெரியுமா?
சமீபத்தில் தொழில்நுட்பம் வளர வளர தமிழ்ச் சொற்கள் அதுக்கேத்தபடி வந்துக்கிட்டுத் தானே இருக்கு.. இருந்தாலும் அப்படி வந்த சொற்கள் குறைவு தான்.
அந்த அளவுக்குக் கணக்கில்லாத சொற்கள் தமிழ்லே இறைஞ்சு கிடக்கு.. அதை வைச்சு இன்னைக்கு நமக்கு இருக்கிற தேவைக்கு ஏத்தபடி, நிரப்பிக்கிறோம்.
அதனாலே அதுக்கு நாம உரிமை கொண்டாட முடியாது. இது எனக்கும் பொருந்தும். என்னை மாதிரி மொழியை நம்பி வாழ்றவங்களுக்கும் பொருந்தும்”
பேச்சுவாக்கில்-போகிற போக்கில் பேசப்பட்டது என்றாலும், எவ்வளவு உயிரோட்டமான உண்மை?
– மணா