தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கி ஓராண்டாகிறது. கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாடு நடத்தி, பெரும் கூட்டத்தைக் கூட்டினார். இதனால் அனைத்துக் கட்சிகளும் விஜயை உற்று நோக்கின.
இந்த நிலையில் தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. பூஞ்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் 3 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் அழைக்கப்பட்டிருந்தார். இப்போது அவர், பீகாரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர்.
தவெகவினருக்கும், விஜய்க்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் இவர் நாலு வார்த்தைப் பேசினார்.
‘’எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு இங்கு ஊழல் இருக்கிறது – மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது – தவெக கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள்.
அடுத்த 100 நாட்களில் இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் 10 புதிய உறுப்பினர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் – டிவிகே குடும்பம் 3 மாதங்களில் 10 மடங்கு பெரிதாக மாறிவிடும்” என்று சொல்லி விட்டு அமர்ந்தார்.
உரையின் தொடக்கத்தில் வணக்கம் என்று தமிழில் சொன்ன பிரஷாந்த் கிஷோர் முடிவில் நன்றி எனக்கூறி உரையை முடித்தார்.
தமிழகம் வரும் வட இந்தியத் தலைவர்களின் வழக்கம் இது. பிரசாந்த் கிஷோரின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்க, யாராவது ஒருவரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவர் பேசியதில் ‘விஜய்’ என்பதை தவிர மற்ற வார்த்தைகள், தொண்டர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அடுத்து ‘மைக்’ பிடித்த விஜய், கேலியும், கிண்டலுமாக பேச்சை ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் ‘டாப்’ கியருக்குப் போனார்.
‘மும்மொழிக் கொள்கைப் பிரச்சினை மீண்டும் தமிழகத்தில் கிளம்பியுள்ளது – இதனை செயல்படுத்தவில்லை என்றால், கல்விக்கான நிதியை வழங்க மாட்டார்களாம் – இது பார்ப்பதற்கு எல்.கே.ஜி – யூ.கே.ஜி சிறுவர்களின் சண்டை போன்று உள்ளது.
நிதியை வழங்க வேண்டியது அவர்கள் (மத்திய அரசு) கடமை – நிதியைப் பெற்றுக் கொள்வது, இவர்கள் (மாநில அரசு) உரிமை.
ஆனால், இவங்க ரெண்டு பேரும் – அதுதான் நம்ம பாசிசமும் பாயாசமும் – நமது அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் ஒருவரையொருவர் சமூக வலைதளங்களில் வசைபாடுகின்றனர்.
இவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் போன்று நடிக்கின்றனர். இதனை நாம் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்” என்று அழுத்தமாகச் சொன்னார் விஜய்.
இதன் மூலம் பாஜகவும் திமுகவும்தான் தனது போட்டியாளர்கள் – தேர்தல் களத்தில் பிரதான எதிரிகள் என்பதைப் பிரகடனம் செய்துள்ளார் விஜய்.
“நாம் ஒன்றும் பண்ணையார்கள் அல்ல. இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையார்களே – நாட்டோட நலன், மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் எப்போது பார்த்தாலும் பணம் – பணம் – பணம்.
இப்படிப்பட்ட மனநிலை கொண்ட பண்ணையார்களை நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். அதை ஜனநாயக முறையில் செய்ய 2026-ல் இறங்கப் போகிறோம்” என்ற விஜய், கல்வி கொள்கையில் தனது நிலையையும் தெளிவு படுத்தினார்.
“எல்லா மொழிகளையும் மதிப்போம் – தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் படிக்கலாம் – அது அவர்களின் உரிமை
ஆனால், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகக் கல்விக் கொள்கைளை கேள்விக்குறியாக்கி அரசியல் ரீதியாக வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி?.” என வினா எழுப்பி, இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு, தனது எதிர்ப்பை அழுத்தமாகவே பதிவு செய்தார். எனினும் ஒரு இடத்திலும் இந்தி என்ற வார்த்தையை விஜய் உச்சரிக்கவில்லை.
ஏமாற்றம் அளித்த விஜய்
தவெகவின் எதிரிகள் யார்? என்பதை அறிவித்த விஜய், இந்த நிகழ்ச்சியில் கூட்டணி குறித்து கோடிட்டுக் காட்டுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாதது, தொண்டர்களை ஏமாற்றம் அடையச்செய்துள்ளது.
கட்சியின் முதல் மாநாட்டில், “ஆட்சி, அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு உண்டு” என உறுதி அளித்தவர், நேற்றைய நிகழ்வில் இது குறித்து ‘மூச்சு’ விடவில்லை.
புறப்பட்ட இடத்திலேயே, தவெக வண்டி நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். அடுத்தடுத்த நிகழ்வுகளில் நகர்கிறதா? என பார்க்கலாம்.
– பாப்பாங்குளம் பாரதி.