தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து இண்டியாக் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்தினார்கள்.
மீண்டும் இதேபோல தமிழக மக்களிடம் முயற்சி செய்தால் ‘கெட் அவுட் மோடி’ என துரத்துவார்கள்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆனது.
இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று ட்ரெண்டிங் செய்துள்ளனர்.
ஸ்டாலின் தமிழகத்தைவிட்டு வெளியேறவேண்டும் என ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக ட்ரெண்டிங் செய்தனர் என்பதைப் பார்க்கலாம்” என்றார்.
இந்நிலையில், நேற்று காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என அண்ணாமலை பதிவு செய்தார்.
இவரை தொடர்ந்து, பாஜகவினர் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்தனர்.
அதன்படி, எக்ஸ் வலை தளத்தில் நேற்று முன்தினம் ‘கெட் அவுட் மோடி’ ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனதை விட, பல மடங்கு அதிகமாக, 12 லட்சத்துக்கு அதிகமானோர் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இதனால், சமூக வலைதளங்களில் திமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக மோதிக் கொண்டனர்.
தற்போது, இந்த ஹேஷ்டேக்குகள் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.