நட்பால் உயிர்ப்பெற்ற உரையாடல்!

அபிலாஷ் சந்திரன்

திருப்பதியில் இருந்து பெங்களூர் வந்திருந்த நண்பர் மகேஷ் ஒரு இளம் வெயிலில் என் பல்கலைக் கழகத்தில் உதிர்ந்தபடி இருக்கும் காய்ந்த இலைகளை மிதித்தபடி தன் உறவினருடன் வந்து என்னைச் சந்தித்தார்.

மகேஷ் பளிச்பளிச்சென்று பேசும் கூர்மையான மனிதர். அண்மைக்காலமாக நான் எழுதி வரும் ஆணியக் கட்டுரைகளைப் பற்றி சிலாகித்து உரையாடினார்.

என்னுடைய நாவல்கள் அதிகமாக கிண்டிலில் கிடைக்காதது குறித்து புகார் சொன்னார்.

அவரைப் போல பார்வை மாற்றுத்திறனாளிகளாக உள்ள பலர் கிண்டிலில் வந்தால்தான் திரை-வாசிப்பு செயலி மூலமாக நூலைப் படிக்க முடியும். இல்லாவிட்டால் வாசிப்பு வாய்ப்புகள், எல்லைகள் குறுகிப் போகின்றன என்று வருந்தினார்.

அவருக்காக உடனே ஒரு நூலை கிண்டிலில் பதிவேற்றுவதாக உறுதியளித்தேன். பதிலுக்கு அவர் தன் பதின்பருவம் குறித்து ஒரு நாவலை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அவர், அதை மறுக்கும் விதமாக பல சாக்குபோக்குகளைச் சொல்லிவிட்டு கடைசியில் ஒப்புக்கொண்டார்.

அடுத்த ஆண்டு நான் கொண்டு வரப்போகும் நூலின் தலைப்பான “ஆண் ஏன் அடிமையானான்?” என்பதைக் கேட்டு மிகவும் மகிழந்தார்.

நாங்கள் இலக்கியம் சம்பாஷிப்பதை புன்னகைத்தபடி கேட்டுக்கொண்டிருந்த மகேஷின் உறவினரான இளைஞர், உடனே உயிர்ப்பெற்றதைப் போல உரையாடலில் புகுந்து ஆண்கள் படும் அவதிகளைப் பற்றியும், அதன் பின்னுள்ள அரசியலைப் பற்றியும் பேசினார்.

அவர் தெலுங்கில் மட்டுமே வாசிக்கக்கூடியவர். ஆனாலும் அவர் அதை தனக்கான நூலாக உணர்ந்தார் என்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.

எதிர்காலத்தில் அந்நூலை மொழியாக்கி வெளியிட வேண்டும் என முடிவெடுத்தேன்.

மகேஷ் எனக்கு ஒரு பை நிறைய திருப்பதி லட்டுக்களைத் தந்தார். நான் அவருக்கு ஒரு டப்பா ரஸகுல்லா கொடுத்தேன். எங்கள் தித்திப்பான சந்திப்பு முடிவுக்கு வந்தது.

நன்றி: முகநூல் பதிவில் இருந்து…

You might also like