மாற்றி யோசிக்கும் தவெக தலைவர் விஜய்!

மாவட்டச் செயலாளர் பதவியில் மாற்றுத்திறனாளி

‘இளைய தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு முடிந்து விட்டது. தளபதி இப்போது தலைவர் ஆகியுள்ளார். இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ள தயாராகி வருகிறார்.

கட்சி நிர்வாகிகள் நியமனத்தில், மற்ற கட்சிகள் போல் இல்லாமல், மாற்றி யோசித்து, புருவம் உயர்த்த வைத்துள்ளார் விஜய்.

இந்த விவகாரத்தை அலசும் முன்பு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோர் காலத்தில் பின்பற்றபட்ட நடைமுறைகளைப் பார்க்கலாம்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிலும் அப்போது மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் ஏகப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும்.

உதாரணமாகச் சென்னையைச் சொல்லலாம். 15 சொச்சம் தொகுதிகளைக் கொண்ட சென்னை மாவட்டத்தில் ஒரே ஒரு மாவட்டச் செயலாளர் மட்டுமே இருந்தார்.

அதிமுகவில் ஜேப்பியாரும், திமுகவில் ஆர்.டி.சீதாபதியும், பின்னர் டி.ஆர்.பாலுவும் இருந்தனர். கட்சியில் சகல அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினர்.

இவர்கள் கட்சிகள், ஆட்சியில் இருக்கும்போது, ஆட்சியிலும் இவர்கள் அதிகாரம் செல்லும்.

எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் ‘திறன்’ படைத்தவர்கள் மட்டுமே அந்த காலத்தில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.

இப்போது இரு கழங்களிலும், நிலமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய தினம், ஒரு மாவட்ட செயலாளர் கையில் அதிக பட்சம் 3 சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளது.

ஓர் உதாரணம். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம், நாங்குநேரி ஆகியவை அந்தத் தொகுதிகள்.

இந்த மாவட்டத்தில் இரு கழகங்களிலும் இரு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாவட்ட செயலாளர் பொறுப்பில் 3 தொகுதிகளும், இன்னொருவர் பொறுப்பில் 2 தொகுதிகளும் உள்ளன.

தமிழகம் முழுக்க, அனைத்து மாவட்டங்களிலும், இரு கட்சிகளிலும் இதே நிலைதான். நிர்வாக வசதிக்காக, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதா? நிறைய பேருக்கு பதவி அளிக்க வேண்டும் என்பதால், உடைக்கப்பட்டதா ? என்பது கட்சி தலைவர்களுக்கே வெளிச்சம்.

இப்போது தவெக கட்சி விவகாரத்துக்கு வருவோம்.

விஜயின் அதிரடி திட்டம்.

தவெக தலைவர் விஜய், இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்து விட்டு, முழு மூச்சாக, கட்சிப் பணிகளில் இறங்க தீர்மானித்து விட்டார். கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையேயான பாலம், மாவட்ட செயலாளர்கள், என்பதால் அவர்கள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

முதல் கட்டமாக இதுவரை 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார். வழக்கமான அரசியல் கட்சிகளைப்போல் இல்லாமல் மாற்றுத்திறனாளி ஒருவரையும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது அவரது புதுமையான சிந்தனையின் வெளிப்பாடு.

சென்னை தியாகராய நகர் கண்ணம்மாபேட்டையை சேர்ந்தவர், அப்புனு. மாற்றுத்திறனாளி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மன்றத்தில் இருப்பவர். இவரை, தென்சென்னை மாவட்ட தவெக செயலாளராக நியமித்துள்ளார் விஜய்.

பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தியுள்ளார்.

தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகளில் பணபலம் மற்றும் ஜாதி பலம் உள்ளவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கும் நடைமுறையே காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில், சாமான்யர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது, அரசியலில், விஜய் போட்டிருக்கும் புதிய பாதையாகப் பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், எளிய மக்களிடம், தவெக கட்சியில் தங்களுக்கு மரியாதையும், பொறுப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார் இளைய தளபதி.

இதனிடையே மாற்றுக்கட்சிகளில் இருந்து, திரளானோர், தவெகவில் இணைய ஆரம்பித்துள்ளனர். இன்னும் பலர் இணைய உள்ளனர். அவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுமா? தேர்தலில் ‘சீட்’ கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

விஜயின் அடுத்த நகர்வுகளைத் தமிழகம் உற்று நோக்குகிறது என்பது மட்டும் உண்மை.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like