புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரையுலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது.
அதிமுகவை ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது.
இவர்கள் நட்பின் ஆழத்தை ஊடகங்கள், பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. தங்களிடையேயான அன்பை, சட்டப்பேரவையில் புரட்சித்தலைவரே பதிவு செய்துள்ளார்.
1977-ம் ஆண்டு ஜுலை மாதம் 15-ம் தேதி எம்.ஜி.ஆர். ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது :
“உண்மையான நண்பர்களாக இருப்பவர்கள், நண்பர்கள் செய்யும் தவறை, இடித்துக் கூறுபவர்களாக இருப்பார்கள்.
போலி நண்பர்கள், இப்படி இடித்துக் கூற மாட்டார்கள். புகழ்ந்து கொண்டே, அடியில் குழி தோண்டுபவர்களாக இருப்பார்கள்.
செய்கின்ற தவறை இடித்துக் கேட்பவர்கள்தான் ’நல்ல நண்பர்கள்’ என்பதை என் தாய் எனக்கு சொல்லி இருக்கிறார்கள்.
போலி நண்பர்கள், சிரிக்க சிரிக்கப் பேசி நம்மை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். உண்மையான நண்பர்கள்தான், நாம் செய்யும் தவறுகளைத் துணிவுடன் எடுத்துரைப்பார்கள் என்று என் தாய் எனக்கு அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் எதிர்க்கட்சியில் இருப்போர், இடித்துக்கூறிய கருத்துகளை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன் – கொஞ்சம்கூட கோபப்பட மாட்டேன் – வருத்தப்பட மாட்டேன்.
எதிர்க்கட்சி தலைவர் (கருணாநிதி), தனக்குள்ள அனுபவத்தின் காரணமாக, இந்த அவையில் சில கருத்துகளைச் சொன்னார்.
இப்படித்தான் இருக்க வேண்டும் – இவற்றை நான் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருக்கிறேன்” என, கலைஞரை, புரட்சித்தலைவர் சிலாகித்தார்.
கருணாநிதி குறித்து தொடர்ந்து எம்.ஜி.ஆர்.பேசினார்.
‘’சபையில் இப்போது கலைஞர் ஒரு விஷயத்தைச் சொன்னார். என்னைப் பற்றி முதலமைச்சருக்குத் தெரியும் – அவரைப் பற்றி எனக்குத் தெரியும்” என அவர் கூறினார்.
அவர் சொன்னதைத்தான் நானும் சொல்ல வேண்டியிருக்கிறது. என்னைப்பற்றி அவர் புரிந்து கொண்டிருக்கிறார் – அவரைப்பற்றியும் நான் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன்.
ஒருவருக்கொருவர் இடையில் கொஞ்சகாலம் பிரிந்திருந்தோம் – என்றாலும் ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல் இல்லை –
“உமாநாத், இங்கே சொன்னார் – ‘ஏன் ஒருவருக்கொருவர் பெயரைக்கூட சொல்வதில்லை’ என அவர் கேட்டார் – பெயர் சொல்வது மட்டுமன்று – ஒருவருக்கொருவர் ‘ஆண்டவனே’ என்று கூப்பிட்டுக்கொள்வதும் உண்டு.
பெயரைச்சொல்வது முக்கியமல்ல – பொதுப் பிரச்சினையில், பொதுத் தன்மையில், மொழிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளில் நாங்கள் நிச்சயமாக அண்ணா அவர்களின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என ஆணித்தரமாக தெரிவித்தார் புரட்சித்தலைவர்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் தேதியன்று பதில் உரை நிகழ்த்திய எம்.ஜி.ஆர்., கருணாநிதியை வாழ்த்திப் பேசியதாவது:
‘’காவல்துறைக்கு (தனது ஆட்சியில்) எந்த அளவுக்கு சம்பளங்களை உயர்த்தி இருக்கிறோம்’ என எதிர்க்கட்சி தலைவர் (கருணாநிதி) இங்கே பேசினார் – அவர் சொல்லும்போது நான் ஒன்றை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.
காலஞ்சென்ற என் மனைவியின் தமையனார், ஒரு போலீஸ்காரர் – அவர் 7, 8 குழந்தைகளுக்கு தந்தை – அவர் வாங்கிய சம்பளம் போதாமல் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நேரில் கண்டறிந்தவன் நான்.
ஆகவே, அப்படிப்பட்ட ஊதியம் உயர்த்தி தந்த, நல்ல காரியத்தை, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் கலைஞர் செய்துள்ளார்.
இதற்காக நான், சுயநலத்தில், தனித்து அதை வரவேற்கிறேன் – அந்த நல்ல காரியத்தை செய்த அவர்கள் (கலைஞர்) வாழட்டும்’’ என்று புகழ்ந்துரைத்தார் எம்.ஜி.ஆர்.
– பாப்பாங்குளம் பாரதி.