‘உன்னால் முடியும்’ – நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தி!

”ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறிந்து கொள்ளலாம்”, ‘நம்பு தம்பி நம்மால் முடியும்’, ’எண்ணங்களே சாதனையாகின்றன’, ‘நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?’ என்பன போன்ற வாசகங்களால் 80-களின் மத்தியில் அன்றைய இளைஞர்களை ஈர்த்து, தன்முனைப்பை விதைத்து, தூண்டுகோலாக விளங்கியவர் எம்.எஸ்.உதயமூர்த்தி எனும் மயிலாடுதுறை. சி. உதயமூர்த்தி.

25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய எம்.எஸ்.உதயமூர்த்தி, அங்கு தான் தொடங்கிய நிறுவனத்தை 1987-ம் ஆண்டு தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் தாயகம் திரும்பி தன்னை எழுத்துலகம், சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ்ச் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

சீரிய சிந்தனைகளைத் தூண்டும், ’எண்ணங்கள்’, ’நாடு எங்கே செல்கிறது?’, ’நீதான் தம்பி முதலமைச்சர்’ உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதிய இவர், 1987-ம் ஆண்டு ’மக்கள் சக்தி இயக்கம்’ எனும் அமைப்பை உருவாக்கினார்.

இவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவரது கல்லூரித் தோழரான இயக்குநர் கே.பாலசந்தர், ’நம்பு தம்பி… நம்மால் முடியும்’ எனும் பெயரில் எம்.எஸ்.உதயமூர்த்தி பிரபல வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரின் பெயரைக் கொண்டு, தன் படத்துக்கு ’உன்னால் முடியும் தம்பி’ எனப் பெயரிட்டு, படத்தின் கதாநாயகன் கமல் ஹாசனுக்கும் ’உதயமூர்த்தி’ எனப் பெயரிட்டு புகழ் சேர்த்தார்.

காலை வேளைகளில் எம்.எஸ்.உதயமூர்த்தியை சந்திக்கச் சென்றால் பெரும்பாலும் அவர் தியானத்தில் இருப்பார். இல்லை ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பார். இப்படி ஒருமுறை வாசகர் ஒருவர் அவரை சந்திக்க சென்றபோது, கடற்கரையைப் பார்த்தவாறு வாசற்படிக்கு அருகில் தரையில் அமர்ந்து புத்தகத்தில் மூழ்கி இருந்துள்ளார்.

அப்போது பலமுறை அவர் மீள்வாசிப்பு செய்த ஒரு பழைய புத்தகம் அவர் கையிலிருந்துள்ளது. பல இடங்களில் அடிக்கோடிட்டு இருந்த அப்புத்தகம் என்னவென்று பார்த்தால், அவர் எழுதிய ‘ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ புத்தகம்.

இப்படி, தான் எழுதிய புத்தகத்தை தானே பலமுறை திரும்பத் திரும்ப வாசித்து அதன் கருத்துகளுக்குள் தோய்ந்து போவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

வயது முதிர்ந்த போதிலும், தனது ஒவ்வொரு நாளையும் சீர்படுத்திக் கொள்ள வேண்டும், தன்னை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியிலிருந்த சிறந்த மனிதரான இவர், 2013-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி தன் 85-வது வயதில் காலமானார்.

வாழ்ந்துகாட்டி தனது ஒவ்வொரு நாளையும் சீர்படுத்திக்கொள்ள வேண்டும், தன்னை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியிலிருந்த சிறந்த மனிதரான இவர் காட்டிய ஆசான், முனைவர் எம்.எஸ்.உதயமூர்த்தியை என்றும் நினைவுகூர்வோம்!

  • நன்றி : ‘இ’டிவி பாரத்
You might also like