“வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்’’ என்று சாகாவரம்பெற்ற ஒரு பாடலை சிவாஜிக்காகப் பாடியிருக்கிறீர்கள்.
அதில் அவர் குரலும், உங்கள் பாட்டும் மாறி மாறி வந்திருக்கின்றன. பாடுவதற்கு ஏற்ற சுருதியில் வசனம் அமைய வேண்டும். அதற்கு சிவாஜி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தீர்களா?’’
– இசைச்சித்தர் என்றழைக்கப்பட்ட சி.எஸ். ஜெயராமனிடம் எடுக்கப்பட்ட வானொலிப் பேட்டியில் இப்படிக் கேட்டவர் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளரான பி.ஹெச். அப்துல்ஹமீது.
‘’நான் மறந்தாலும், நீங்கள் சாகாவரம் பெற்ற பாடல் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி. ஒரே சமயத்தில் சிவாஜி பேசவும், நான் பாடவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். நான் அவருக்குப் பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுத்துப் பாட முடியாது’’
இப்படிப் பதில் அளித்த சி.எஸ்.ஜெயராமனின் வானொலிக் குரல் பெரும் திரள் கூடியிருந்த அரங்கில் ஒலித்தபோது பார்வையாளர்கள் பரவசத்துடன் கை தட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து ‘’வண்ணத்தமிழ்’’ பாட்டு பாடப்பட்டபோது சிவாஜியின் குரலாக அந்தப் பாடல் வரிகளை பி.ஹெச். அப்துல் ஹமீது பேச, ஹரிஹரன் அனந்து சி.எஸ்.ஜெயராமனின் குரலைப் பிரதி எடுத்த மாதிரிப் பாடி அமர்க்களப்படுத்த காதில் ஈரமான இளஞ்சாரல் அடித்தது.
தன்னுடைய தந்தையின் நினைவாகச் சிறப்பான விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தவர் ஜெயராமனின் மகளான சிவகாம சுந்தரி.
எண்ணூறு பேர் அமரக்கூடிய அரங்கில் நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். வெளியே முண்டியடித்த பார்வையாளர்கள் என்று சென்னையில் பிப்ரவரி 7-ம் தேதி மாலை அமோகமாக நடந்தது சி.எஸ்.ஜெயராமனுக்கான நூற்றாண்டு விழா.
இறுதிவரை பிறமொழிப் பாடல்களைப் பாட மாட்டேன் என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்த ஜெயராமனின் பாடல்களை இசைத்த கணேஷ் கிருபா இசைக்குழுவுக்கு அரங்கு நிறைந்த மரியாதை.
ஹரிஹரன் அனந்து, முகேஷ், ஜெயஸ்ரீ என்று அளவான பாடகர்கள். கூடவே இசையமைக்க ஆறு பேர். அவ்வளவு தான். இருந்தாலும் இசையில் அவ்வளவு மனநிறைவை ஏற்படுத்திவிட்டார்கள்.
நிகழ்ச்சியின் தலைப்பான ‘’சங்கீத சௌபாக்கியமே’’ என்ற சம்பூர்ண ராமாயணப்பாடல் பாடப்பட்டபோது அரங்கமே தலையசைத்தது.
பாவை விளக்கில் இருந்து “காவியமா? நெஞ்சில் ஓவியமா’’ வுக்கு கிறங்கியது. புதையல் படத்தின் “விண்ணோடும் முகிலோடும்’’ பாடலோடு ஒன்றியது. பாவை விளக்கில் வரும் ’’ஆயிரம் கண் போதாது’’ பாடலுக்குத் தாலாட்டியதைப்போல உணர்ந்தது.
ஜெயராமனின் மகள் வழிப்பேரனான டாக்டர் அறிவுநிதி ‘பராசக்தி’யின் பிரபலமான ‘’கா..கா..கா ஆகாரம் உண்ண…’’ என்கிற தாத்தாவின் பிரபலமான பாடலைப் பாடினார் தந்தை மு.க.முத்துவைப் போலவே. அதற்குப் பலத்த கைதட்டல்.
அதே பராசக்தி படத்தில் வரும் ’’தேசம் ஞானம் கல்வி’’ என்ற பாடலுக்கு ஏக வரவேற்பு. ‘’சில முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே! காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக் கோனே! கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே! பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே’’ என்கிற வரிகளுக்குப் பலர் அனுபவித்துச் சிலாகித்துக் (!) கைதட்டினார்கள்.
முன்வரிசையில் கலைஞரின் உறவினர்கள் உட்படப் பல பிரபலங்கள்.
பி.சுசீலா மேடையேறிப் பாடியவர்களை வாழ்த்தினார். ஜெயராமனைப் பாராட்டினார்.
“இவரை மாதிரியான கலைஞர்களுடன் நான் சேர்ந்து பாடியிருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். இவர் பாடிய “சங்கீத சௌபாக்கியமா?” பாட்டு என்றால் எனக்கு உயிர்.
என்னுடைய பேச்சில் தெலுங்கு கலந்துவரும். ஆனா பாருங்க.. பாடுறப்போ அப்படி வராது.” என்று “காவியமா நெஞ்சில் ஓவியமா” பாடலின் சில வரிகளைப் பாடியபோது சட்டென்று ட்ராக் மாறிய மாதிரி தமிழ் கமழ்ந்த அந்தக் கணங்கள் அற்புதமானவை.
நிகழ்ச்சியின் முதுகெலும்பைப் போல இயங்கிய பி.ஹெச்.அப்துல் ஹமீது ‘’இனி மேலும் தொடராதா என்று பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே முடித்துவிடுவது தான் நிகழ்ச்சிக்குச் சிறப்பு. இசைச்சித்தரின் பாடல்களை மறவாமல் இருப்போம்.’’ என்றார் இனிமை மாறாத சில்லென்ற குரலுடன்.
விழாவை ஒட்டி சாருகேசி தொகுத்து வெளியிடப்பட்ட நூற்றாண்டு விழா மலரிலிருந்து சில துளிகள் இங்கே :
# சிதம்பரம் ஜெயராமனுக்கு முதலில் பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர்-மகாலிங்கம். அவருடைய தந்தையின் நெருக்கமான நண்பர் ஜெயராமன் மறைந்ததால் இவருடைய பெயர் ‘ஜெயராமனாக’ மாறியது.
# பாடகராக ஆகுமுன்பு நாடக நடிகராகிப் பிறகு சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
# தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடச்சொன்னபோது ’நான் பாட மாட்டேன்’’ என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார். இவரிடம் இசை கற்றுக் கொண்டவர் எம்.கே.தியாகராஜபாகவதர்.
# பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிற ஜெயராமன் நிகழ்ச்சியை நிறைவு செய்யும்போது தமிழ் மொழி வாழ்த்துடன் பாடி முடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
# பல படங்களுக்கு இசையமைத்திருக்கிற இவருடைய பெயரை இன்றும் சொல்லும் படம் எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’. அதில் இடம் பெற்ற பாடல் ‘’குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது?’’
# தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்திருக்கிற இவருக்கு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதும் கிடைத்திருக்கின்றன. இசைச்சித்தர் என்று அழைக்கப்பட்ட ஜெயராமன் மறைந்தது 28.1.1995 ல்.
# “இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனைப் போல அவரது அடிச்சுவட்டைத் தொடருபவர்கள் இருக்கலாம். ஆனால் அந்தச் சங்கீத சாகரத்தின் ஆழத்திற்கு இணையாக அதற்கு முன்னரும் ஒருவர் இல்லை. அதற்குப் பின்னரும் ஒருவரில்லை.‘’ என்று விழா மலரில் எழுதியிருக்கிற பாடகரும், மருத்துவருமான சீர்காழி சிவ.சிதம்பரம் கட்டுரையை இப்படி முடித்திருக்கிறார்.
“சகாப்தங்கள் தோன்றுவது ஒரு முறை தான்!’’
– முத்தமிழ் இசைச் சித்தர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா மலர் – 2018
#இசைச்சித்தர் #சி_எஸ்_ஜெயராமன் #பி_ஹெச்_அப்துல்ஹமீது #கே_வி_மகாதேவன் #சிவகாம_சுந்தரி #எம்_கே_தியாகராஜ_பாகவதர் #c_s_jayaraman #b_h_abdul_hameed #k_v_mahadevan #sivagama_sundari #thiyagaraja_bhagavathar