புத்தகங்களே போராட்ட ஆயுதங்கள்!

புத்தகங்கள் பற்றியும் வாசிப்பு பற்றியும் எத்தனையோ அறிஞர்கள், ஆளுமைகள் காலம் காலமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றிய கருத்தாக்கங்கள் இன்னும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன. அப்படிப் புத்தகங்கள் பற்றிப் பேசிய மிகச்சிறந்த ஆளுமைகளின் சொற்களில் சில இங்கே:

****

புத்தகங்களுக்காகவே “இராஜக்கிருகம்” என்ற வீட்டைக் கட்டி அதில் 69,000 புத்தகங்களைக் கொண்ட நூலகமாக்கி ஆசியாவிலேயே தனி நபரால் அமைக்கப்பட்ட முதல் நூலகம் என்ற பெரும்புகழ் விளங்கும் அளவிற்கு புத்தகங்களைக் காதலித்த புத்தகப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.

இலண்டன் நூலகத்தில் பசி மயக்கம் ஏற்படக்கூடிய அளவிற்கு இடைவிடாது புத்தகங்களைப் படித்தவர், 23 ஆண்டுகளில் 40,000-க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தவர் காரல் மார்க்ஸ்.

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி கூறி பல லட்சம் புத்தகங்களைக் குவித்தவர் லெனின்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங். 

தென்னாட்டு பெர்னாட்ஷா என்று போற்றப்படும் பேரறிஞர் அண்ணா, தன் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை படித்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி  விட்டதால்,  அதை முடிக்கும் வரை அறுவை சிகிச்சையைத் தள்ளி வைத்திருக்கிறார் அண்ணா.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்று சொல்லியிருக்கிறார் ஆபிரகாம் லிங்கன்.

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி என்றார் ஜூலியஸ் சீசர்.

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்று கூறியிருக்கிறார் டெஸ்கார்டஸ்.

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு என்பது இங்கர்சாலின் கூற்று.

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்  என்கிறார் புத்தகங்கள் மீது அதீத நேசம் கொண்ட பிரான்சிஸ் பேக்கன்.

புரட்சிப் பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்பது லெனின் கருத்து.

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை என்று கருதுகிறார் ஆஸ்கார் வைல்ட்.

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு என்கிறார் சிக்மண்ட் ப்ராய்ட்.

You might also like