தேர்தல் செலவுக்கு வழங்கிய பணத்தைக் கட்சிக்கே திருப்பி கொடுத்த மன்மோகன் சிங்!

இரண்டு முறை பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங், அண்மைக்காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஏற்கனவே அவருக்கு இரு முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வருவது வாடிக்கையாக இருந்தது. டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் இருந்தபோது நேற்று இரவு அவர் திடீரென மயங்கி விழுந்தார். சுய நினைவு இல்லை.

குடும்பத்தார் அதிர்ந்தனர். உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலன் இல்லை. இரவு 9.51 மணிக்கு உயிர் பிரிந்தது.

பிரதமர் நாற்காலியை அலங்கரித்த பொருளாதார நிபுணர்

பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங், பொருளாதார மேதை. பஞ்சாப், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் படித்தவர். படிப்பை முடித்த பின், பொருளாதார பேராசிரியராக பணியைத் தொடங்கினார்.

மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர், நிதிச் செயலர், ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக் குழு துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1990-ம் ஆண்டு பிரதமர் சந்திரசேகரின், பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

1991-ம் ஆண்டு பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில், நிதி அமைச்சராக இருந்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தார்.

மன்மோகன் சிங்குக்கு குருஷரண் கவுர் என்ற மனைவியும், உபிந்தர் சிங், தாமன் சிங், அம்ரித் சிங் ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

மாநிலங்களவையில் 6 முறை எம்.பி.யாக இருந்தார். மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு முறைதான் போட்டியிட்டிருக்கிறார்.

1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர் தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் விஜய் குமார் மல்ஹோத்ராவிடம், மன்மோகன் சிங் தோல்வியை சந்திக்க வேண்டி இருந்தது.

தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் கட்சி அவருக்கு ரூ.20 லட்சம் அளித்திருந்தது. இது போதாது என டெல்லியின் பல செல்வந்தர்களும், தொழிலதிபர்களும் பெரும் தொகையை நன்கொடையாக அளிக்க முன்வந்தனர்.

அதனை மன்மோகன் ஏற்கவில்லை. அது மட்டுமல்ல – தேர்தல் செலவுக்கு காங்கிரஸ் அளித்த பணத்தில் ரூ.7 லட்சத்தை கட்சிக்கே திருப்பி அளித்த வரலாறு அவருக்கு உண்டு.

அரசியலுக்கு வந்தது எப்படி?

பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங், அரசியலுக்கு வந்தது எப்படி?

அவரே சொல்கிறார்:

‘’1991-ம் ஆண்டு ஜூன் மாதம், காங்கிரசின் நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றபோது, என்னை நிதி அமைச்சராக தேர்வு செய்தார் – இந்தத் தகவலை எனக்கு தெரிவிக்க, முதன்மைச் செயலரை அனுப்பியிருந்தார்.

அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை – அடுத்த நாள் நரசிம்ம ராவே என்னை அழைத்தார்.

நல்ல உடை அணிந்து, உடனே ஜனாதிபதி மாளிகைக்கு வரும்படி கூறினார் – நானும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றேன் – அமைச்சர் பதவி ஏற்றேன் – இப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்”

ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

நீண்ட காலம் அரசியல் பதவியில் இருந்தாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், விமர்சனங்கள் எதையும் வெளிப்படுத்தாதவர் மன்மோகன் சிங்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மன்மோகன் சிங் “நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்பதை நான் நம்பவில்லை – எதிர்க்கட்சியினர், சமகால ஊடகங்களை காட்டிலும் வரலாறு என்மீது கருணையோடு இருக்கும் என்று நம்புகிறேன்.

நேர்மையாக இருந்தேன் என்பதை நான் நம்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன் – நான் என்ன செய்தேன்? என்ன செய்ய வில்லை? என்பதை வரலாறு தீர்மானிக்கும்” என எளிமையாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆம். மன்மோகன் சிங், என்ன செய்தார்? என்பதை வரலாறுதான் தீர்மானிக்கும்.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like