மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் முதல் கட்டமாக 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி தேர்தல் நடந்தது.
இதைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக, ஜார்க்கண்டில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது.
வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான அணி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொங்கு சட்டசபையா?
மகாராஷ்டிராவில் பாஜக – ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ‘மகாயுதி‘ கூட்டணிக்கும் ‘மகா விகாஸ் அகாடி’ அணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மேட்ரிஸ்’ மற்றும் ‘பீப்புள்ஸ் பல்ஸ்’ உள்ளிட்ட சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்பில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி-மார்க் மற்றும் மராத்தி – ருத்ரா ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் உள்ளது.
பி-மார்க் நிறுவனத்தின் கருத்து கணிப்பில் மகாயுதி 137 முதல் 157 இடங்களையும், மகா விகாஸ் அகாடி 126 முதல் 146 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராத்தி – ருத்ரா கருத்துக்கணிப்பில் மகாயுதி 128 முதல் 142 இடங்களையும், மகா விகாஸ் கூட்டணி 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் யாருக்கு வெற்றி ?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 41 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் விவரம் :
நியூஸ்: 18
தே.ஜ., கூட்டணி : 47
இந்தியா கூட்டணி : 30
பீப்பிள்ஸ் பல்ஸ்
தே.ஜ., கூட்டணி : 44-53
இந்தியா கூட்டணி: 25-37
ஆக்சிஸ் மை இந்தியா
தே.ஜ., கூட்டணி: 25
இந்தியா கூட்டணி: 53
மெட்டரைஸ்
தே.ஜ., கூட்டணி: 42-47
இந்தியா கூட்டணி: 25-30
அண்மைக் காலமாக, சில நிறுவனங்களால், எடுக்கப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிப்பதில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.
– மு.மாடக்கண்ணு