அன்பினால் ஆட்கொண்ட அழகர்!

நெகிழ்ந்து எழுதிய பாரதி கிருஷ்ணகுமார்

நவம்பர் 14-ம் தேதி நாகை மாவட்டம் வடக்குப் பொய்கை நல்லூரில் நடைபெற்ற கோரக்கச் சித்தர் விழாவில் எனது உரையை நிறைவு செய்தபோது இரவு மணி 10:30 ஆகி இருந்தது. வழக்கம் போலவே வியர்வையில் குளித்திருந்தேன்.

எனவே தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பிக் குளித்துவிட்டு அதன் பிறகு உணவருந்தப் போகலாம் என்று தீர்மானித்தோம்.

என்னோடு தம்பிகள் சந்துரு, பாபுராஜ், மணிகண்டன் என்று நாங்கள் மொத்தம் நான்கு பேர். ஆனால், அறைக்குச் சென்று விட்டு, அதற்குப் பிறகு உணவருந்தப் போனால் அனைத்து

உணவகங்களும் மூடி விடக் கூடிய அபாயம் காத்திருந்தது. எனவே, நேரடியாக உணவருந்தப் போகலாம் என்று எனக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

எனக்கு அது சம்மதமில்லை. ஆனால் பிறர் பசியையும் கணக்கில் எடுக்க வேண்டுமே! எனவே உணவருந்தி விட்டுப் பிறகு அறைக்குத் திரும்பி ஒரு ‘அமெரிக்கக் குளியல்’ போட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.

உணவகம் தேடிப் போனோம். பெரிய கடைகள் ஏதுமில்லை. சிறிய கடைகளும் மூடிக் கிடந்தன. எனவே திறந்திருக்கிற எந்தக் கடையாக இருந்தாலும் உண்பது என்கிற முடிவுக்கு வந்தோம்.

அவுரித் திடலுக்குப் போகிற பாதையில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில், விறகு அடுப்புப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த, புகைபடிந்த பெயர்ப் பலகை இல்லாத ஒரு உணவகம் கண்ணில்பட்டது.

அதைக் கவனித்துக் காரை நிறுத்துவதற்குள் கார் 100 மீட்டருக்கு மேல் ஓடிவிட்டது. கத்திக் கூப்பாடு போட்டு காரைத் திருப்பிக் கடை வாசலுக்கு வந்தால் எல்லா விறகுக் கட்டைகளையும் வெளியே இழுத்துப் போட்டுத் தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

அணைந்த விறகுக் கட்டைகளின் ஊடே பயணித்துச் சாப்பிட ஏதாவது இருக்கா? என்று பாபுராஜ் கேட்டார்.

தோசை இருக்கு வாங்க என்றார் கடைக்காரர். அடுப்பை அணைச்சுட்டீங்க என்றேன். ஒரு கேஸ் அடுப்பு இருக்கு வாங்க என்றார். நிம்மதியாக இருந்தது.

டேபிளைத் துடை; இலையைப் போடு என்று கடையில் இருந்த பையன்களுக்கு உரத்த குரலில் உத்தரவிட்டார் கடைக்காரர். கேஸ் அடுப்பில் தோசை ஊற்ற ஆரம்பித்தார்.

ஆம்லெட் இருக்கா என்றேன். ரெண்டு முட்டை தான் இருக்கு என்றார். இன்னும் நாலு முட்டை வாங்க முடியாதா? என்றேன்.

இலை போட்டு விட்டு பக்கத்தில் நின்ற சிறுவன் “கடையெல்லாம் மூடிட்டாங்க” என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொன்னான்.

“இரண்டு முட்டையை நாலு பேருக்கும் சமமா போட்டுத் தர்றேன்” என்று எங்கள் பக்கம் திரும்பாமலே சொன்னார் கடைக்காரர். சிறப்பு என்று பதில் சொன்னேன் .

முதல் இரண்டு தோசைகள் தயாராகி இலைக்கு வந்து விட்டன. பரிமாறும் போது என்னைப் பார்த்தவர்” உங்கள எங்கேயோ பாத்துருக்கேன்” என்றார். பாபு ராஜ் அறிமுகப்படுத்த முயன்றார்.

நான் வேண்டாமென்று சைகையில் அவருக்கு உணர்த்தி விட்டேன். அடுப்பில் தோசை ஊற்றிக் கொண்டே, “பேரு கூட ஞாபகம் வந்துருச்சு… குமார்.. கிருஷ்ணகுமார் தானே… என்று என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார்.

ஆம் என்றேன். “முப்பது வருஷத்துக்கு முன்னால அவுரித் திடல்ல பேசுனீங்க” என்று தொடங்கினார்.

ரெண்டு முணு தடவ பேசி இருக்கீங்க. நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு மேல பேசுவீக… என்று தோசைகளைப் பரிமாறிக் கொண்டே எல்லாத் தகவல்களும் பேசி முடித்தார்.

என் பேச்சைப் புகழ்ந்து அவர் பேசிய வார்த்தைகளைக் கடந்து அவர் காட்டிய அன்பும் அங்கீகாரமும் எல்லையற்றது.

நான்கு பேரும் வயிறாரச் சாப்பிட்ட பிறகு எவ்வளவு பில் என்று கேட்டபோது நீங்க என் கடைக்கு வந்தது எவ்வளவு பெருமை என்றார்.

இல்லை பணம் தந்தால் தானே இருவருக்கும் பெருமை என்றேன். சரி ஒரு நூறு ரூபா கொடுங்க என்று சொல்லிவிட்டு அதை மட்டும் வாங்கிக் கொண்டார். கடைக்குப் பேரு என்ன? என்றேன்.

பேரெல்லாம் இல்ல. நம்ம பேரு தான் என்றார்.

பேரு என்றேன். அழகர் என்றார். அழகரா என்று வியந்ததும், ஆமா சொந்த ஊரு மதுரை என்றார்.

இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்தபோது… ‘ஒரு நிமிஷம்’ என்று காத்திருக்கச் சொல்லி விட்டு வலது கைக் கட்டை விரலை உயர்த்திப் பிடித்துக் காட்டினார். அன்பினால் ஆட்கொண்ட அழகர்.

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like