ஜம்மு – காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி!

முதலமைச்சர் ஆகிறார் உமர் அப்துல்லா

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 90 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 18, 25 மற்றும்  கடந்த  1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  (சிபிஎம்) ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளில் களம் இறங்கவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று  எண்ணப்பட்டன.

தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் ‘இந்தியா’ கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெகபூபா முப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தக் கட்சி 28 இடங்களில் வாகை சூடி இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் ‘இந்தியா‘ கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில்  பாஜக ஒரு இடத்திலும் வெல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் இந்துக்கள் என்பதும் ‘இந்தியா’  கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஆகிறார் உமர் அப்துல்லா

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ‘’ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார்’’ என தெரிவித்துள்ளார்.

பரூக் அப்துல்லாவின் மகனான உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவராக உள்ளார்.  

‘’தேர்தலின் போது,  ஜம்மு-காஷ்மீருக்கு  மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார் – அதனை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்” என உமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • மு.மாடக்கண்ணு

#காங்கிரஸ் #உமர்_அப்துல்லா #ஜம்மு_காஷ்மீர் #தேசிய_மாநாட்டு_கட்சி #பரூக்_அப்துல்லா #மார்க்சிஸ்ட் #கம்யூனிஸ்ட்  #சிபிஎம் #பாஜக #மக்கள்_மாநாட்டுக்_கட்சி #ஆம்_ஆத்மி_கட்சி #இந்தியா_கூட்டணி #congress #Omar_Abdullah #J_&_K_CM #Farooq_Abdullah #jammu_kashmir #marxist #communist #cpm #bjp #india_alliance

You might also like