ரவிசுப்ரமணியன் எனும் என் கலைத்தோழன்!

பிருந்தா சாரதி

புராதனக் கோவில்களும், செழுமையான இசை மரபும், தீரா இலக்கியத் தொடர்ச்சியும், வேத பாடசாலைகளும், சைவ சமய மடங்களும், பகுத்தறிவுப் பொதுவுடைமைச் சிந்தனைகளும், காவிரி அரலாறுகளும், மகா மகமும்,

விவசாய வியாபாரப் பொருளாதாரமும் பின்னணியாகக் கொண்ட கும்பகோணத்தில் கலைகளின் மீதான தீராத காதலோடு உலவி தனக்கான அடையாளத்தை எங்கெங்கோ தேடி இறுதியாகக் கவிதையில் கண்டடைந்தவர் என் இனிய நண்பர் ரவி சுப்பிரமணியன்.

ஒன்றைப் பிடித்தால் அதன் அடி முடி காணாமல் ஓயாது அவரது ஆர்வம். அலங்கார மொழி கொண்டு ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய கவிதைகளை நான் அறிவேன்.

இன்று சொற்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பேரமைதியும் உண்மையின் தரிசனம் காணும் பெருந்தேடலுமாய் அவரது கவிதை வளர்ச்சி கண்டுள்ளது.

ப்பனை முகங்கள், காத்திருப்பு, காலாதீத இடைவெளியில், சீம்பாலில் அருந்திய நஞ்சு, விதானத்துச்சித்திரம், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ என ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் மேல் நோக்கித் தன் சிறகுகளை விரித்தபடி பறந்து செல்கிறார்.

தொண்ணூறுகளில் அவரும் நானும் கும்பகோணத்து வீதிகளிலும் காப்பிக் கடைகளிலுமாய் இலக்கியம் பேசிக்கொண்டு திரிந்த நாட்கள் ஏதோ முன் ஜென்மத்துக் காட்சிகளைப்போல் பழுப்பு நிறமேறிவிட்டன இந்த முப்பத்தி ஐந்து வருட இடைவெளியில்.

கல்லூரி முடித்து அவசர அவசரமாக வந்து எம். வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தேனுகா ஆகியோரைக் காந்திப் பூங்காவில் சந்தித்துப் பேசிய பொற்காலம் அது.

அப்போதுதான் மா. அரங்கநாதனின் ‘பொருளின் பொருள் கவிதை’ வெளிவந்திருந்தது. அதைப்படித்து விவாதித்து, சிலாகித்து, முரண்பட்டு அதற்காகச் சங்க இலக்கியம் தொடங்கிப் பின் ஞானக்கூத்தன், பசுவய்யா, பிரமிள் என்று தேடி அலைந்து படித்து நேரம் காலம் போவது மறந்து பேசிப் பேசிக் களைத்தோம்.

அவற்றின் பலன்தான் என்ன? மா. அரங்கநாதன் பெயரிலேயே வழங்கப்படும் இலக்கியச் சாதனைக்கான விருது ரவிக்கு வழங்கப்பட்டது. மொழிக்குள் சாதகம் செய்தே காலம் கரைத்த அவரது பொழுதுகளுக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததாக அதை நான் எண்ணுகிறேன்.

ரவீ…. என் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ கவிதைத் தொகுதிக்கு மனம் திறந்து நீங்கள் எழுதிய அணிந்துரை என் நட்புக்கும் கவிதைக்கும் நீங்கள் கொடுத்த அங்கீகாரம். நான் பாதுகாக்கும் ஒரு பொக்கிஷம்.

புதுக்கவிதைகளுக்கும் இசையமைக்க முடியும் என்று பல முன்னணிக் கவிஞர்களின் கவிதைகளை மெட்டமைத்துப் பாடி வரும் உங்கள் இசைப் புலமையை நாடறியும்.

அந்த வரிசையில் என்னுடைய இரண்டு கவிதைகளையும் இசையமைத்துப் பாடிவருவதைக் கேட்டுப் பரவசமடைகிறேன்.

அதைவிடவும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலக்கிய நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நீங்கள் செய்த உதவிகளும், உங்கள் விடுதியில் அவர்களை தங்க வைத்து உபசரித்ததும் ‘விதானத்துச் சித்திர’மாய் என் மனதில் பிரகாசிக்கிறது.

‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்பது உங்களுக்கு மிகப் பொருத்தமான ஒருவரி.

அண்மையில் நடைபெற்ற என் ‘முக்கோண மனிதன்’ கவிதை நூல் திறனாய்வுக் கூட்டத்தில் உரையாற்ற இருந்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அன்று காலை நிகழ்ந்த ஒரு துக்க சம்பவத்தால் நிகழ்ச்சிக்கு வர இயலாதபோது ‘உடுக்கை இழந்தவன் கை போல’ உடனடியாக ஓடி வந்து நம் நிகழ்ச்சியில் மிகச் சிறந்த உரை ஒன்றை வழங்கி, அந்த இக்கட்டைச் சமாளிக்க உதவிய உங்கள் அன்பை மறக்க முடியாது.

படைப்புலகில் சாதித்தவர்கள் பற்றி ‘ஆளுமைகள் தருணங்கள்’ என்று ஒரு நூல் எழுதியுள்ளீர்கள்.

அதில் சிலரை ஆவணப் படமாகவும் பதிவாக்கியிருக்கிறீர்கள். அந்த வரிசையில் உங்களையும் சேர்க்கப் பின்னொருவன் வருவான். கைகொடுங்கள்.

இதமாக மீண்டும் ஒருமுறை கை குலுக்கிக் கொள்வோம். மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like