எம்ஜிஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர்.
ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான்.
ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார்.
அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம்.
தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார்.
வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர்.
ஆனாலும் அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன்.
அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.
என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார்.
என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.
‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்…
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது…”
உடனே, ‘‘சரிதான் சரிதான்….’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது.
1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.
நன்றி: தி இந்து.