’சத்யஜித் ரே’யை விஞ்சிய ’மாரி செல்வராஜ்’!

இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி !

’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், ராமிடம் உதவியாளராக இருந்தவர். முதல் படம் விமர்சன ரீதியாக அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததோடு, வசூலையும் குவித்தது.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய இரு படங்களும் வெற்றி அடைந்தன. தொடர்ச்சியாக மூன்று ‘ஹிட்’ சினிமாக்களைத் தந்த அவரது நான்காம் படம் ‘வாழை’.

பொன்வேல், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ள, இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாக கூறப்படும் ’வாழை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் முதல்நாள், முதல் காட்சியை நெல்லையில் உள்ள திரை அரங்கில், ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார், மாரி செல்வராஜ்.

’வாழை‘ படத்தை சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘வாழை’ படம் குறித்தும் அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்தும் நெகிழ்ச்சி பொங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வாழ்த்து செய்தியில், “சினிமாத் துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களைப் பார்த்து யோசித்தது உண்டு- ‘வாழை’ அப்படியொரு படம் – படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார் – மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார் – மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல், படங்களைப் பார்க்கையில் பொறாமையாக இருக்கும்- அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையா என ஆதங்கப்படுவேன்.

ஆனால், இவர்களையெல்லாம் விஞ்சுகிற வகையில், என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக படத்தை எடுத்திருக்கிறார் – எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்” என உணர்ச்சிகரமாக தனது எண்ணத்தை பதிவு செய்துள்ளார், பாரதிராஜா.

இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், “நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறி இருக்கிறேன் – இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன் – இயக்குநர் இமயத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் வாழை, படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தனது பதிவில் ஷங்கர், ”இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்களை சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை.

ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது – மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’’ என இயக்குநர் ஷங்கர் வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பேசி வெளியிட்டுள்ளார்.

வசூல் நிலவரம் எப்படி ?

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘வாழை’யின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ’வாழை’ திரைப்படம், முதல் நாளில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

இந்தத் தகவலை சினிமா வசூல் நிலவரங்களைத் துல்லியமாக கணிக்கும் Sacnilk தளம் வெளியிட்டுள்ளது. இரண்டாவது நாளில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இரண்டு நாட்களில், மொத்தமாக ’வாழை’ திரைப்படம் இந்தியாவில் 3 கோடியே 65 லட்சம் ரூபாய் வசூலையும், உலகளவில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூலையும் எட்டியுள்ளது. சனிக்கிழமை பெரும்பாலான திரையரங்குகளில் ’வாழை‘ ஹவுஸ் ஃபுல்.

அமோக வரவேற்பின் காரணமாக சில திரையரங்குகள், முதல் நாளைக் காட்டிலும், கூடுதல் காட்சிகளை திரையிட்டுள்ளன. இதனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது.

‘வாழை‘யின் அமோக விளைச்சல், கோடம்பாக்கத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like