கிரேசி மோகனின் கணிப்பை உண்மையாக்கிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

தேசிய திரைப்பட விருதுகள்  ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.

4 தேசிய விருதுகள்:

பொன்னியின் செல்வன் படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட 4 தேசிய விருதுகள் கிடைத்தன. அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஒலிக்கலவை செய்த சவுண்ட் இன்ஜினியர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யார் இந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி

அஞ்சலி, தளபதி, சதிலீலாவதி என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த சவுண்ட் இன்ஜினியருக்கான தேசிய விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வென்றுள்ளார்.

1995-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில்  ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கமல்ஹாசனின் மகனாக நடித்திருப்பார்.

அந்தப் படத்தில், “அப்பா ஸ்பேனர் கொடுங்க, ஸ்க்ரூ டிரைவர் கொடுங்க என வந்து கேட்கும் அவரை பார்த்து பெரிய இன்ஜினியராக வருவானாக்கும்” எனக் கூறுவார் கமல்ஹாசன். இந்த வசனங்களை எழுதியவர் கிரேசி மோகன்.

இந்நிலையில், பல வருடங்கள் கடந்து சவுண்ட் இன்ஜினியராக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி  தேசிய விருதை வென்று சாதனை புரிந்துள்ளார். 

இதனிடையே கிரேசி மோகன் அன்றே கணித்ததை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி இன்று நிறைவேற்றி இருக்கிறார் என ரசிகர்கள் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியையும் கிரேசி மோகனையும் கொண்டாடி வருகின்றனர்.

You might also like