பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்!

மரணம் என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய கட்டுரை

செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்?

நான் செத்த பின் நானாக இருந்தால் தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும்.

செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.

நான் நானாகவே தொடர வேண்டும்.

அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும். கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும். அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன?

எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.

ஒருவர் தன் தந்தை இறந்ததைப் பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில், ” Nobody dies; they live in memories and in the genes of their children”.

How True?

மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்து போய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்து விடுவோமாம்.

உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்”. ‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது.

*அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும்? அவள் குரல் என் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது.

குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’’ என்று சொல்வார்.

மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச் சொல்ல வேண்டும்।

“இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்.

இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை, நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது.”

அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளர் என்பதால் அவரிடம் திரும்பத் திரும்ப மரணத்தை வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில் கேட்கப்பட்டதுண்டு.

அதற்கு அவரின் பதில், “மரணிக்காமல் வாழ்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்.

மிக நெருக்கமானவர்கள் மரணத்தில் தான், நமக்கு உண்மையான தரிசனம் கிடைக்கிறது. தினம் தினம் பல பேர் இறக்கிறார்கள். அந்தச் சாவெல்லாம் நம்மைப் பாதிப்பதில்லை.”

‘மரணம் ௭ன்பது கடவுளுக்கு வாசல்’ என்று ரஜனீஷ் சொல்லியிருக்கிறார்.

மனிதனால் இதுவரை களங்கப்படாத ஒரே ஒரு சங்கதி மரணம். அதை அவன் இன்னமும் கொச்சைப் படுத்தவில்லை. கொச்சைப் படுத்தவும் முடியாது. அது துல்லியமானது. அதை அவனால் அறியவே முடியாது.

அதை அவனால் ஒரு விஞ்ஞானமாகவோ, வேதாந்தமாகவோ மாற்ற முடியாது. அது அவன் கைப்பிடியிலிருந்து எப்போதும் வழுக்கிச் செல்கிறது.

உங்கள் வாழ்வில் எதிர்பாராமல் மரணம் குறுக்கிடும்போது உங்கள் வாழ்வு அர்த்தமற்றதாகிறது. ஆம், வாழ்வு அர்த்தமற்றது தான். ஒவ்வொருவரும் கொஞ்சம் இறக்கிறோம்.”

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது:

“உங்களுக்கு மறு பிறவியில் நம்பிக்கை உண்டா? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா? அது உடலில் எங்கு இருக்கிறது? சாவை வெல்ல முடியுமா? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை.”

அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது.
நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்?

நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா? உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா? இதில் என்ன அதிசயம் !”

“சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை. ஒரு தொடர்ச்சிதானாம். நம்ம உடம்பில் அறுநூறு கோடி செல் உயிரணுக்கள் இருக்கு.

ஒவ்வொரு இருபத்து நாலு மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.

முப்பது வயசுக்கப்புறம் நம்முடைய மூளை வருஷத்துக்கு ஒரு பர்சென்ட் செத்துக்கிட்டு இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா, செதில் செதிலா அழிஞ்சுண்டு வர்றோம். அதனால நாம எப்போ சாகறோம். எப்போ உயிரோட இருக்கோம்கிறதே சரியா சொல்ல முடியாது.”

“பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்.”

– நன்றி: முகநூல் பதிவு

You might also like