‘காவல்காரன்’ எதிர்கொண்ட சவால்கள்!

புரட்சித் தலைவர் சொந்தமாகத் தயாரித்த ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்கள் பெரும் சோதனைகளைச் சந்தித்து, உருவாகி, வெளியானவை என்பது பலரும் அறிந்த செய்தி.

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘காவல்காரன்’ திரைப்படமும் பல்வேறு சவால்களைச் சந்தித்து, உருவான படமாகும்.

இதற்கு முன் சத்யா மூவீஸ், எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய படங்களைத் தயாரித்திருந்தது. மூன்றாவது படம் ‘காவல்காரன்’.

சக்தி வசந்தன் என்பவர் எழுதிய ‘போலீஸ்காரன் மனைவி’ எனும் கதையைக் கருவாகக் கொண்டு, ‘காவல்காரன்’ திரைக்கதையை உருவாக்கினார், ஆர்.எம்.வீரப்பன். திரைக்கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஓ.கே. வாங்கி விட்டார்.

1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘நான் ஆணையிட்டால்’ ரிலீஸ் ஆனது. அதே ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தில் ‘காவல்காரன்’ படத்தை திரையிட திட்டம். அதனை எம்ஜிஆர் ஏற்றுக்கொண்டார்.

சத்யா மூவீஸ் நிறுவனத்தின் ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’ ஆகிய இரு படங்களிலும் சரோஜாதேவி, கதாநாயகியாக நடித்தார். காவல்காரனில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

‘நான் ஆணையிட்டால்’ வெளியான 1966ம் ஆண்டே ‘காவல்காரன்’ படத்துக்கான பூஜையும் அமர்க்களமாக நடந்து முடிந்தது.

1967-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்க இருந்ததால், அதற்கு முன்பாக, ‘காவல்காரன்’ படத்தை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விஜயா வாகினியில் அரங்குகள் அமைக்கப்பட்டன. படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் முழுமை பெறவில்லை.

அந்தச் சூழலில் தான், தமிழகத்தை உலுக்கிய, அந்தக் கொடுமையான நிகழ்வு அரங்கேறியது. 1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி எம்ஜிஆர் சுடப்பட்டார்.

ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர்.ராதாவால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட நெஞ்சை பிளக்கும் சம்பவம் தமிழகத்தை கொதிநிலைக்குத் தள்ளி இருந்தது.

சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்த பிறகே, தமிழ்நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

1967-ம் ஆண்டு தேர்தலில், ஆளும் காங்கிரஸ் தோற்கடிப்பட்டு திமுக அமோக வெற்றி பெற்றதும், அறிஞர் அண்ணா தலைமையில் புதிய அரசு அமைந்ததும், அனைவரும் அறிந்த செய்தி.

எம்ஜிஆர் பிரச்சாரத்துக்கு போக இயலாத நிலையில், மருத்துவமனையில் அவர், கழுத்தில் கட்டுடன் சிகிச்சை பெறுவது போன்ற சுவரொட்டிகளே, அந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிரதான காரணம் என்பதை சொல்லத்தேவை இல்லை.

எம்ஜிஆரை, அமைச்சர் அந்தஸ்து கொண்ட, சிறு சேமிப்புத் துணை தலைவராக அண்ணா நியமித்தார்.

மீண்டும் எழுந்த பிரச்சினை

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், சுடப்படுவதற்கு முன்பாக, சுமார் 9 ஆயிரம் அடிகள் வரை வளர்ந்திருந்த ‘காவல்காரன்’, இரு மாதங்களுக்கு பின் மீண்டும் உயிர் பெற ஆரம்பித்தது.

அந்தப் படத்தின் பெரும்பாலான வசனப் பகுதிகளின் ‘ஷூட்டிங்’ துப்பாக்கி சூடு நிகழ்வுக்கு முன்பாக ஏற்கனவே முடிந்திருந்தது. ஆனால் மீண்டும் படத்தை ஆரம்பித்தபோது, புதிதாக சில பிரச்சினைகள் உருவானது.

துப்பாக்கிச் சூட்டில், எம்.ஜி.ஆர். தொண்டைக்குள் சிக்கிகொண்ட குண்டை எடுத்து விட்டார்கள். ஆனால், அப்போது புரட்சித் தலைவரால் சில வார்த்தைகளை மட்டுமே பேச முடிந்தது. படுக்கையில் இருந்ததால் உடம்பும் குண்டாகி விட்டது.

போதாக்குறைக்கு, எம்.ஆர்.ராதா மீதான வழக்கு விசாரணைக்காக – சாட்சி சொல்ல, எம்.ஜி.ஆர். அடிக்கடி நீதிமன்றம் வேறு செல்ல வேண்டி இருந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியின் தான் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது.

விபத்துக்குப் பின்னர் ‘காவல்காரன்’ படத்துக்காக எம்.ஜி.ஆர். நடித்த முதல் காட்சி “நினைத்தேன் வந்தாய்” பாடல் காட்சியாகும். வாஹினி ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து பாடலை எடுத்தனர்.

ஒரு வழியாக முழு படப்பிடிப்பும் முடிந்து, ‘காவல்காரன்’ 1967-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆனது.

படம் வெளியாவதற்கு முன்பே, அப்போது முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, படம் பார்ப்பதற்கு ஏவிஎம் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோட்டையில் இருந்து, அண்ணா, பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி, ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த, ஏவி மெய்யப்ப செட்டியார் வீட்டில் பகல் உணவு சாப்பிட்டு விட்டு, படம் பார்த்தார்.

படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அண்ணா, விலாவாரியாகப் பாராட்டினார்.

‘காவல்காரன்’ நூறு நாட்களுக்கு மேல் ஓடி பிரமாண்ட வெற்றி பெற்றது.

சென்னையில் முதலமைச்சர் அறிஞர் அண்ணா தலைமையில் நூறாவது நாள் விழா நடைபெற்றது. விழா மேடையில் எம்.ஜி.ஆருக்கு தங்கப் பதக்கம் அணிவித்து நெகிழ்ந்தார் அண்ணா.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like