தனித்திறன் மாணவர்களுக்கு பார்வையாக இருக்கும் பார்கவி!

சக்சஸ் ஸ்டோரி: 12

சென்னை காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் குடும்பத் தலைவி பார்கவி ஸ்ரீராம், பள்ளியில் படிக்கும்போதே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்ற கருணையைக் கைவரப் பெற்றவராக இருக்கிறார். கோயம்புத்தூரில் பிறந்த அவர், திருமண வாழ்க்கைக்குப் பிறகு சென்னைக்கு நகர்ந்துவிட்டார்.

கல்வி விளக்கு:

தன் கணவர் வீட்டார் கொடுத்த உற்சாகத்தில் இங்கேயும் பார்வைக்குறைபாடு கொண்ட மாணவர்களுக்காகத் தேர்வுகளை ஆர்வத்துடன் எழுதி உதவுகிறார். இதுவரை 12 கல்லூரி மாணவர்களின் கல்வி விளக்கை தன் அன்புக் கரங்களால் அணையாமல் காத்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய பார்கவி ஸ்ரீராம், “சின்ன வயசுலேயே எனக்குப் பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கு உதவ வேண்டும், பிஸியோதெரபி படிக்கவேண்டும் என்ற விருப்பங்கள் இருந்தன.

கோவையிலிருந்தபோது நான் படித்த பள்ளி மூலமாக சில மாணவர்களுக்குத் தேர்வு எழுத ஸ்க்ரைபராக உதவினேன்.

சென்னைக்கு வந்ததும், இங்கு அதுபோன்ற தொடர்புகள் கிடைக்கவில்லை. மீண்டும் நான் படித்த பள்ளியின் வழியாக ஸ்க்ரைபர் வாய்ப்புகள் தெரியவந்தன.

ஸ்க்ரைபர்கள் பற்றி விழிப்புணர்வு:

மீண்டும் பல ஆண்டுகள் கடந்து அவர்களுக்கு உதவுவதில் மகிழ்ந்தேன். என்னைப் பற்றி எழுதுவதைவிட ஸ்க்ரைபர்கள் பற்றி வெளியே தெரியவேண்டும் என நினைக்கிறேன். இதுதொடர்பான விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.

எனக்குப் பொதுத்தேர்வுகள் எழுதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே எழுதியிருக்கிறேன். மனத்திருப்தி ஏற்படுகிறது. அதை விளம்பரப்படுத்திக்கொள்ள நினைப்பதில்லை.

மனிதாபிமானத்தோடு இருக்கிற எல்லோருமே ஸ்க்ரைபாக உதவி செய்யலாம். கொஞ்சம் பொறுமை அவசியம். இதற்கு வேறெந்த சிறப்புத் தகுதியும் தேவையில்லை. என் கணவரும், மாமனார் ஸ்ரீதரன் இருவரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

பெருமைப்படும் குடும்பம்:

பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு உதவுவதில் அவர்கள் பெருமைப்படுகிறார்கள். நான் ஸ்க்ரைப் பற்றி சொன்னதுமே, என்னை முதலில் ஊக்கப்படுத்தியவர் என் மாமனார்தான். நமக்குப் பணம் காசைவிட இந்த புண்ணியம் போதும்மா என்று நெகிழ்ந்தார்.

இந்த மனநிறைவுதான் என்னை அவர்களுக்காக ஓடவைத்திருக்கிறது. இந்த நாளில் உங்களால் வரமுடியுமா என்று கேட்பார்கள்.

நமக்கு வசதியாக இருக்கிற நாளில் சென்று எழுதலாம். அதேபோல கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக பாடங்கள் எடுத்துவருகிறேன்.

அம்மா காட்டிய வழி:

இங்கே நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கக் கூடாது. நம்மைவிட அதிகம் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நம்மால் கண்ணை மூடிக்கொண்டு இருளில் நடக்கமுடியாது.

பார்வைத்திறன் இல்லாமல் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இவர்களைப் பார்த்தால் நம்முடைய கஷ்டம் பெரிதாகத் தெரியாது. அந்த பிள்ளைகளைப் பார்த்தால், எல்லா துயரங்களையும் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை வாழ்க்கையில் ஏற்படும்.

“நீ செருப்பு இல்லாமல் கவலைப்படாதே. பலர் கால் இல்லாமல் இருக்கிறார்கள்” என்று என் அம்மா சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த வார்த்தைகள்தான் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது” என்று ஆர்வத்துடன் மடை திறந்த வெள்ளமாகப் பேசுகிறார்.

எஸ். சாந்தி

You might also like