நடிகர் என்பதைத் தாண்டி நட்புக்கு முக்கியத்துவம் தருபவராக இருந்தார் தயாரிப்பாளரும் நடிகருமான கே. பாலாஜி. அந்த உண்மையான நட்பும் இவரை என்றும் கைவிட்டதில்லை.
“உண்மையான நட்பு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ இருக்க வேண்டும்.” என “திரும்பி பார்க்கிறேன்” என்ற நிகழ்ச்சியில் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் கே.பாலாஜி. அதன் கருத்தாக்கம் இதோ. (ஆகஸ்ட் – 5 கே.பாலாஜியின் பிறந்தநாள்)
ஜெமினி கணேசன்:
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே ‘பிரேம பாசம்’ படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போதே பழக்கமான இவர்கள் நட்பு, ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியது வரை தொடர்ந்தது.
ஒப்பனை அறையில், ஜெமினி – சாவித்ரியிடம் பேச வேண்டும் என்றால், “டே பாலாஜி! சாவித்திரி அப்பா வர்றாரானு பாருடா. வந்தா உடனே சிக்னல் கொடு” என்ற அன்புக் கட்டளையின் பேரில் காவல் நின்றவர் பாலாஜி.
சிவாஜியுடன் பல படங்களில் நடித்திருந்தாலும், ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது.
அந்த இருவரின் ஆதரவுடன் 1966-ல், தன் மூத்த மகள் சுஜாதாவின் பெயரில் “சுஜாதா சினி ஆர்ட்ஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கி, ஜெமினி சாவித்திரி நடிக்க, “அண்ணாவின் ஆசை” படத்தைத் துவக்கினார் பாலாஜி.
பாலாஜி சொந்தமாக படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது வேலாயுதம் தானும் ஒரு பங்குதாராக சேர்ந்து படம் தயாரிக்கவும் பண உதவி செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். இடையே சில சோதனைகள் வந்தபோதும், முகம் சுளிக்காமல் உதவினார் வேலாயுதம்.
படம் தயாராகி யாருமே வாங்க முன்வராத போது, அதை எஸ்.எஸ்.வாசன் வாங்கி வெளியிட்டார். இதனால் நஷ்டத்தில் இருந்து தப்பித்தார் பாலாஜி.
இந்த அனுபவத்தில் இருந்துதான் வேறு மொழிகளில் வெற்றி பெற்ற கதையை வாங்கி, தமிழுக்கு ஏற்றபடி தயாரித்து வெற்றிப் படங்களாக்கினார் பாலாஜி.
அடுத்ததாக பாலாஜி எடுத்த படம் ‘தங்கை’. ஏ.சி. திருலோகசந்தர் பாலாஜியின் பழைய புரசைவாக்கம் நண்பர். அவர் இயக்கத்தில் நடிகர் திலகமும், கே.ஆர் விஜயாவும் நடித்திருந்தார்கள். ‘தங்கை’ படம் சூப்பர் ஹிட்.
இந்தப் படத்தில் இருந்து தொடங்கிய இவர்களது ராசி, பிறகு சிவாஜியை வைத்து சுமார் 18 படங்கள் தயாரிப்பது வரை தொடர்ந்தது. இதில் பலதும் சூப்பர் ஹிட் வெள்ளி விழா படங்களே.
“சிவாஜிக்குள்ள மனிதாபிமானத்தைப் போல எங்கும் பார்க்க முடியாது. உடன்பிறவா சகோதரன் போலத்தான் என்னுடன் பழகுவார்” என்பார் பாலாஜி.
சிவாஜியை வைத்து அதிக படங்கள் தயாரித்ததில் இவருக்கே முதலிடம்.
இவர் தயாரித்த “ராஜா” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் அப்படத்தில் கதாநாயகனுக்கு ராஜா என்றும் கதாநாயகிக்கு ராதா என்றும் சூட்டியதையே பின்னாளில் அவர் தயாரித்த அத்தனைப் படங்களுக்கும் வைத்தார்.
ராஜா-ராதா என்ற பெயர்களைக் கொண்டே இவரது படங்களின் நாயகன் – நாயகியை அறிந்துகொள்ளலாம்.
எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரை வைத்து இவர் படம் எடுக்கவில்லையே தவிர, அவருடன் ஒரு பக்தி கலந்த நட்பு எப்பவுமே பாலாஜிக்கு உண்டு. ஒவ்வொரு விழா அன்றும் எம்.ஜி.ஆரிடம் சென்று அவருடையான ராசியான கையால 100 ரூபாய் வாங்குவது பாலாஜியின் வழக்கம்.
ஒரு தடவை எம்.ஜி.ஆரே, “சிவாஜியை வைத்து படம் எடுக்கறே, என்னை வச்சு ஏன் எடுக்க மாட்டேங்கற?” என்று கேட்டாராம்!
அதற்கு பாலாஜியோ “ஒவ்வொரு விழாவிற்கும் தான் தேடி வந்து அவரிடம் பணம் வாங்குவதாயும், அப்படி அவர் பணம் தருவதால் எம்.ஜி.ஆரை தான் முதலாளியாகவே நினைப்பதாகவும், ஒரு முதலாளியை வைத்து ஒரு தொழிலாளி எப்படி படம் எடுக்க முடியும்” என்றும் பதில் பேசி சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறார்.
ஆனால் எம்.ஜி.ஆர் உடன் ‘என் கடமை’ என்ற ஒரே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார், பாலாஜி.
இவரது மகன் சுரேசுக்கு லாயோலா கல்லூரி, நிர்வாகம் சீட் தர மறுத்துவிட்ட போது முதல்வராக இருந்த எம்ஜிஆர்-ன் சிபாரிசின் பேரில் சீட் கிடைத்ததை மகிழ்வாக தருணமாக உணர்ந்தார்.
ஜெயலலிதா:
பாலாஜிக்கு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நட்பு ஒரு உன்னதமான நட்பு. 2008-ம் ஆண்டு பாலாஜி மிகவும் உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். அப்போது ஜெயலலிதா அவரை அக்கறையுடன் உடல் நலம் விசாரித்தார். தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை பாலாஜி விட்டுவிடும்படி ஜெயலலிதா உரிமையுடன் கண்டித்தார்.
மேலும் பாலாஜியின் டாக்டரிடம் பாலாஜியின் உடல் நிலைபற்றி தனக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். ஜெயலலிதாவின் நட்பின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போனார் பாலாஜி.
பாலாஜி காலமானபோது “என் அண்ணன் என்னை விட்டு போய்விட்டார்” என ஜெயலலிதா கண்ணீர் விடும் அளவுக்கு உயர்ந்த பண்பாளர்.
சிறந்த நட்புக்கு உதாரணமாக திகழ்ந்த பாலாஜி 2009 மே 2-ல் இவ்வுலகை விட்டு மறைந்தார், இவர் மறைந்தாலும் இவரது திரைப்படங்கள் நமக்கு இவரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
வேலாயுதம்
சிறு சிறு நாடகங்கள் மூலம் கிடைத்த அனுபவத்தில், 1951ல் ஜெமினி ஸ்டுடியோவில் எஸ்.எஸ்.வாசனிடம் வேலைக்கு சேர்ந்து, படிப்படியாக 15 வருடத்தில் சொந்தமாக படத் தயாரிப்பாளர் ஆனார். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் பலர். அதில் முக்கியமானவர், கே.ஆர்.விஜயா அவர்களின் கணவரும், சுதர்சன் சிட் பைனான்ஸ் ஓனருமான வேலாயுதம்.
வேலாயுதம் நடிகை கே.ஆர்.விஜயாவை திருமணம் செய்ய பெரிதும் துணை நின்றவர் தான் பாலாஜி.
– நன்றி: முகநூல் பதிவு