என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு.
நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்லயே கிடப்பான். திடீர்னு நடுராத்திரியில வந்து நின்னுட்டு, “எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்”னு உரிமையாக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு.
“டேய் விசு… நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்குத்தான் சுமாரா போடுறே”னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, ‘பிறக்கும்போதும் அழுகின்றான்… இறக்கும்போதும் அழுகின்றான்” பாட்டு. இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும்.
இந்தியா – பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்திருந்தான். அப்போ ஜனாதிபதியா இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்னு கேள்விப்பட்டதும் எங்களைச் சந்திச்சார் அவர்.
அப்போ அவர் முன்னால ‘பிறக்கும்போதும் அழுகின்றான்… இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டை சந்திரபாபு பாடிக் காட்டினான். டாக்டர் ராதாகிருஷ்ணன் பாட்டை ரொம்ப ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தப்ப, இந்தப் படுவா ராஸ்கல் என்ன பண்ணான் தெரியுமா? பாடிக்கிட்டே சர்ருனு தாவிப்போய் அவர் மடில உட்கார்ந்துட்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு, ‘நீ பெரிய ஞானஸ்தன்’னு சொல்லிட்டான். நாங்க பதறிப்போயிட்டோம். ஆனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் சிரிச்சுட்டே, அவனை அணைச்சுக்கிட்டார்.
– இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
நன்றி : முகநூல் பதிவு