1974 – 75 களில் எல்லாம் எனக்கு என்ன மாதச் சம்பளம் இருந்திருக்கும்? 400, 450-க்கு மேல் இருந்திராது.
‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ ‘அஃக்’ பிருந்தாவனம் ப்ரிண்டர்ஸில் அச்சாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. பரந்தாமன் கேட்ட கடைசித் தவணைச் செலவு தொகையை அனுப்ப என்னிடம் பணம் இல்லை.
ஆர்.பாலுவிடம் தான் கடன் கேட்டேன். நான் வாங்கிய முதல் கடன் அது. பாலு உடனே யாரிடமோ பிரட்டிக் கொடுத்தான். பாலு தந்திராவிட்டால், அந்தக் குறிப்பிட்ட டிசம்பரில் தொகுப்பு வெளிவந்திருக்காது. ஒருவேளை வந்திருக்காமலே கூடப் போயிருந்திருக்கலாம்.
அண்மையில் நானும் தங்கராஜுவும் பாலுவைப் பார்த்துவிட்டு வந்தோம். பாலு வீட்டை விட்டுப் புறப்படும்போது ஆசையாகச் சொன்னான்: “மாப்பிளே. அஞ்சு நிமிஷம் லேக்கைப் பார்த்துட்டுப் போங்க”.
நிற்கும், நகரும் வெளிச்சத்துடன் ஏரி நீரிலும் ஒளியிலும் கார் இரவில் ததும்பிக் கொண்டிருந்தது. பாலு ஏரியல்ல. அவனுடையது வற்றாத நீர்மை.
என்னைப் போல நகரும் வெளிச்சம் அல்ல அவனுக்கு. அவனுடையது ‘சில பழைய பாடல்கள்’ கதையில், ‘சினேகிதிகள்’ கதையில், இன்னும் சில கதைகளில் வரும் வெளிச்சம்.
வெளிச்சத்துக்குப் பால் பேதம் உண்டா என்ன?
நன்றி: முகநூல் குறிப்பு