முதல் திருநங்கையர் நூலகம்: மதுரையில் புது முயற்சி!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் – 8

மதுரையில் செயல்படும் திருநங்கையர் ஆவண மையம் சார்பில் நூலகம், டிரான்ஸ் பப்ளிகேஷன் மற்றும் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

திருநங்கையர் ஆவண மையம்

டிரான்ஸ் ரிசோர்ஸ் சென்டரை உருவாக்கிய நிறுவனர் பிரியாபாபு, நம்மிடம் புதிய பதிப்பகம் மற்றும் நூலகத்தின் பணிகள் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

“மதுரையில் திருநங்கைகளுக்கான ஆவண மையம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது திருநங்கை சமூகத்துக்கான பிரத்யேக நூலகத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் திருநங்கையர் உலகம் தொடர்பான நூல்கள் மற்றும் அவர்கள் எழுதிய படைப்புகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றத் தீர்ப்புகள்

திருநங்கைகள் குறித்த ஆய்வுகள், நீதிமன்ற தீர்ப்புகள், பேப்பர் நறுக்குகள், அழைப்பிதழ்கள், ப்ரெளச்சர்கள் மற்றும் பாம்ப்லெட்ஸ் எல்லாம் இங்குள்ளன. ஏற்கெனவே எங்கள் மையத்தில் ஆய்வு செய்தவர்களின் ஆய்வுத் தொகுப்புகளும் இருக்கின்றன.

திருநங்கைகள் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதுதான் ஆவண மையத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

ஒருமுறை மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்பட விழா, இலக்கிய விழா போன்ற நிகழ்வுகளையும் அங்கு சென்று நடத்துகிறோம்.

வாழ்க்கைத் திறன் மேம்பாடு

தமிழகம் முழுவதும் சில கல்லூரிகளில் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குகிறோம். மதுரை மன்னர் கல்லூரி, எஸ்பிஎம் கல்லூரி, திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி போன்றவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம்.

திருநங்கைகள் பற்றிய ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கும் எங்கள் மையம் மூலம் தரவுகளைக் கொடுத்து உதவுகிறோம். அதேபோல வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் திருநங்கைகளைச் சந்தித்து பேட்டி எடுப்பதற்கும் உதவியாக இருக்கிறோம்.

டிரான்ஸ்நியூஸ். காம்

இந்த நூலகத்தை அனைவரும் பயன்படுத்தும் நோக்குடன் டிரான்ஸ்நியூஸ். காம் என்ற பெயரில் இணையப் பத்திரிகையையும் வெளியிடுகிறோம். அதில் கதை, கட்டுரை, கவிதைகள் உள்பட ஆய்வுத் தகவல்களும் இருக்கும். அடுத்து டிரான்ஸ் பப்ளிகேஷன் தொடங்கியிருக்கிறோம்.

தற்போது இடையினம், கொற்றவை என்ற நாவல் மற்றும் நான் எழுதிய அரவாணிகள் சமூக வரைவியல் என்ற நூலின் மறுபதிப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளோம். காட்சி ஊடகத்திலும் கால் பதிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் டிரான்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பும் நிதியுதவியும்

எம்எஸ்எம்இ அமைப்பில் முறைப்படி பதிவு செய்திருக்கிறோம். டிரான்ஸ் பிலிம்ஸ் சார்பாக திருநங்கைகள் பற்றிய வரலாற்றுப் படம் ஒன்றின் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதுவொரு ஜமீனில் வாழ்ந்த திருநங்கையின் உண்மை வரலாறு.

இலக்கியப் படைப்புகள் ரீதியாக ஆவண மையம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எங்களது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் மாணவர்களின் பள்ளி, கல்லூரி இடைநிற்றல் குறைந்திருக்கிறது. திருநங்கைகளின் படைப்புகள் தொடர்ந்து வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூடுதலாக வேலைவாய்ப்பு தொடர்பாக ஆலோசனை மற்றும் நிதியுதவியும் திருநங்கையர்களுக்குச் செய்கிறோம்” என்று விரிவாகப் பேசினார்.

– எஸ். சாந்தி

You might also like