படங்கள் தோற்றாலும் அறிமுகங்கள் தோற்றதில்லை!

பாரதிராஜாவின் கைராசி

தமிழ் சினிமாவில் புதிய அலையைப் பரவ விட்ட சமுத்திரம், பாரதிராஜா. கே.பாலசந்தருக்கு அடுத்து, நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரளான கலைஞர்களை அறிமுகம் செய்தவர். அதனால்தான் ’இயக்குநர் இமயம்’ என புகழப்படுகிறார்.

ஒரு இயக்குனருக்கு முதல் படத்தின் வெற்றியை விட இரண்டாம் படத்தின் வெற்றிதான், திரை உலகில் அவரது இருப்பை உறுதி செய்யும்.

முதல் படத்தில் ஜெயித்த ஏராளமான டைரக்டர்கள், இரண்டாம் படத்தில் சறுக்குவது, தமிழ் சினிமாவின்  சாபம்.  பார்த்திபன், விக்ரமன், ‘லவ்டுடே’ பாலசேகரன் என ஒரு டஜனுக்கும் மேற்பட்டோரை உதாரணமாக சொல்லலாம்.

இது தெரிந்திருந்தும் இரண்டாம் படத்தில் பாரதிராஜா, மிகப்பெரிய ‘ரிஸ்க் ‘ எடுத்தார்.

என்ன?

நாயகன், நாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் புதுமுகங்களையே, தனது இரண்டாம் படமான ‘கிழக்கே போகும் ரயில் ‘ படத்தில் அவர் நடிக்க வைத்தார்.

படம் பெரும் வெற்றி. நெல்லை போன்ற சிறு நகரங்களில் கூட வெள்ளிவிழா கொண்டாடியது.

அதில் நடித்த சுதாகர், ராதிகா ஆகியோர் கால்ஷீட் கொடுக்கமுடியாத அளவுக்கு ரொம்ப நாட்கள் ‘பிஸி’யாக இருந்தனர். ’ஆர்’ வரிசையில் ராஜா அறிமுகம் செய்த பல நாயகிகள், கோடம்பாக்கத்தை பல ஆண்டுகள் ஆண்டனர்.

அவர்கள், பாரதிராஜாவின் வெற்றிப்பட நாயகிகள். பாரதிராஜா இயக்கி, ‘பாக்ஸ் ஆபீசில்‘ தோல்வி கண்ட படங்களின் நட்சத்திரங்களும், பிற்பாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்தனர்.

அவர்கள் குறித்தே இந்த கட்டுரை. 

சுகன்யா

பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து‘ படத்தில், ஹீரோ, ஹீரோயின், வில்லன், துணைப் பாத்திரங்கள் என அனைவருமே புதுமுகங்கள்தான். குற்றாலம் பகுதியில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றது. சுகன்யாவை, இதில்தான் பாரதிராஜா அறிமுகம் செய்தார்.

இளையராஜா அருமையான பாடல்களைக் கொடுத்திருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. பாரதிராஜாவுக்கு, அது தோல்விப்படம்  என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், பாரதிராஜாவின் வெற்றிப் படங்களில் நடித்து, பின்னர் வெற்றிகரமான நாயகிகளாக வலம் வந்த, பிற நாயகிகளுக்கு நிகராக சுகன்யாவும் கோடம்பாக்கத்தில் உலா வந்தார்.

1990-களில் முன்னணிக் கதாநாயகர்களாக திகழ்ந்த கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து பல ஆண்டுகள், தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத  நாயகியாக இருந்தார். 

நெப்போலியன்

தோல்விப் படமான ‘புது நெல்லு புது நாத்து ‘ படத்தில் அறிமுகமானவர் தான், நெப்போலியன். வயதுக்கு மீறிய கேரக்டரை கொடுத்திருந்தார், பாரதிராஜா. நாயகியின் தந்தை வேடம். வில்லன். அசத்தி இருந்தார் ‘மாவீரன்‘.

தனது அடுத்தடுத்த படங்களில் நெப்போலியனை பட்டைத் தீட்டிய, பாரதிராஜா, ‘கிழக்குச் சீமையிலே’ படம் மூலம் உச்சத்தில் ஏற்றி வைத்தார்.

ரஜினிக்கு வில்லனாக இருந்தவர், பின்னர் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்து, இதனைத் தொடர்ந்து  நாயகன் வேடத்துக்கு உயர்ந்தார்.

ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்தார், நெப்போலியன். சினிமாவைக் காட்டிலும் அதில் பெரிதாக சாதித்தார்.

மத்திய அமைச்சராகவும் உயர்ந்தார், இந்த ’உயர்ந்த’ நடிகர். இந்தியாவில் நடிகர் ஒருவர் மத்திய அமைச்சரானது, அதுவே முதன் முறை.

காஜல் – ப்ரியாமணி

ப்ரியாமணியும், காஜலும் அறிமுகமானது, வேறு மொழிகளில் என்றாலும், அவர்கள்  வெளிச்சத்துக்கு வந்தது பாரதிராஜா மூலம் தான்.

ப்ரியாமணிக்கு ‘கண்களால் கைது செய்’ படமே, நல்ல முகவரியாக அமைந்தது. அதுபோல் காஜல் இன்று, பெரிய உயரம் தொட்டிருப்பதற்கு, பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ தான் பிள்ளையார் சுழி போட்டது.

ரஞ்சிதா கதாநாயகியாக அறிமுகம் ஆன ‘நாடோடித் தென்றல்’ தோல்விப் படம் என்றாலும், அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் நாயகியாகவே வலம் வந்தார்.

வைரமுத்து

கே.பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தோடு ரிலீஸ் ஆனது பாரதிராஜாவின் ’நிழல்கள்‘. படம் – தோல்வி. ஆனாலும் அதில் நடித்த ‘நிழல்கள்’ ரவி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் ‘பிஸி’யாகவே இருக்கிறார்.

’நிழல்கள்‘ படத்தில் இடம் பெற்ற ‘பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலமாக வைரமுத்துவை சினிமா பாடலாசிரியர் ஆக்கினார் பாரதிராஜா.

’நிழல்கள்‘ தோற்றாலும் இன்றைக்கு, வைரமுத்து தமிழ் சினிமாவின் ‘நம்பர்-1’ பாடல் ஆசிரியராக இருப்பதும், பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர் என்பதும், உலகம் அறிந்த செய்தி.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like