வாரிசுகளால் உயர்ந்த இந்தியா கூட்டணி?

அரசியலில் வாரிசுகள் தலையெடுத்து, தந்தையின் உயரங்களைத் தாண்டுவது, உலகெங்கிலும் பரவியுள்ள பொதுவான விஷயம்.

டாக்டர், வக்கீல், சினிமா நடிகர், டைரக்டர், தொழிலதிபர், ஆடிட்டர் போன்றோரின் சந்ததிகள், தங்கள் தந்தை அல்லது தாயின் அடியொற்றி, அவர்கள் துறையில் முத்திரைப் பதிப்பது விமர்சனம் செய்யப்படுவதில்லை.

ஆனால் அரசியலில் மட்டும் வாரிசு அரசியல்,  ‘தீண்டாமை‘க் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

மக்களிடம் தங்களுக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கால், புதியக் கட்சியைக் கட்டமைத்த தலைவர்கள், அதன் ‘ஆயுள்காலம்‘ கருதி, தங்கள் வாரிசுகளையே, அடுத்த தலைவர்களாக வளர்த்தெடுத்தனர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும், இந்த வழக்கம், விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அந்த வழக்கம் முன்னிலும், தீவிரமாகவே அனைத்துக் கட்சிகளிலும் பின்பற்றப்படுகிறது.

ஏன் ?

தந்தை உருவாக்கிய இயக்கத்தை தனயன்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை, இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் ஏற்பட்டதால், வாரிசுகள் எளிதாக தலைமைப் பொறுப்பை ஏற்க முடிந்தது.

ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாடு, பிஜு பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி, லாலுவின் ஆர்.ஜே.டி, பால் தாக்கரேயின் சிவசேனா, என்.டி.ஆரின் தெலுங்கு தேசம், அண்ணாவைத் தொடர்ந்து கலைஞரால் கட்டிக் காப்பாற்றப்பட்ட திமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கட்சிகள் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது என்றால், அந்தக் கட்சிகள், வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டதால் தான்.

வாரிசுகளின் கட்சிகள் பாஜகவுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழும் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டதால்தான், பிரதமர் மோடி இந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிகளைக் குறிவைத்துத் தாக்கினார்.

மோடி நினைத்த மாதிரியே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த, ‘இந்தியா‘ கூட்டணியில் அங்கம் வகித்த வாரிசுகள், பாஜக வீழ்ச்சிக்கு முழு காரணமாக இருந்தனர்.

ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தேஜஸ்வி ஆகிய நான்கு வாரிசுகளுக்கு, மோடியை வீழ்த்தியதில் பெரும் பங்குண்டு.

ஸ்டாலின், தலைமையிலான இந்தியா கூட்டணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களையும் அள்ளியது. இதனை மோடி எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பாஜகவைக் குழி தோண்டி புதைத்து விடுவார் என்பதை மோடி எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 33 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) ஆகிய கட்சிகளை உடைத்த பாஜக, அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், கிட்டத்தட்ட அனைத்தையுமே அள்ளலாம் என கனவு கண்டது.

ஆனால் இந்த மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு 30 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு வெறும் 17.

272 இடங்களில் ஜெயித்திருந்தால், பாஜக தனித்து ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அந்தக் கட்சிக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

பாஜக பெரும்பான்மை பெறுவதற்கு, மேலும் 32 இடங்கள் தேவை என்ற நிலையில், வாரிசுகள்  தலைமையிலான ‘இந்தியா‘ கூட்டணிக்  கட்சிகள், இந்தத் தேர்தலில் மொத்தமாக  72 இடங்களில் வென்றுள்ளன.

(திமுக -22, சமாஜ்வாதி – 37, சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9, ஆர்.ஜே.டி. 4).

பிரதமர் மோடி பயந்தது போலவே, பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்து விட்டனர் வாரிசுகள்.

 ‘இந்தியா’ கூட்டணியையும் ’உயிர் பிழைக்க’ வைத்துள்ளனர்.

இன்னொரு முக்கிய செய்தியையும் இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும். வாரிசுகளை விளாசித்தள்ளும் மோடி, பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது, வாரிசுகளில் தயவில் தான் என்பதே அந்த செய்தி.

என்.டி.ஆரின் மருமகன், தேவகவுடா மகன், சரண்சிங் பேரன், சரத்பவார் அண்ணன் மகன் ஆகிய நான்கு வாரிசுதாரர்கள் தான், இன்று மோடி அமர்ந்துள்ள பிரதமர் நாற்காலியின் கால்களாக இருக்கிறார்கள் என்பது விநோத உண்மை.

– மு.மாடக்கண்ணு.

#இந்தியா_கூட்டணி #பாஜக #ஸ்டாலின் #அகிலேஷ்_யாதவ் #உத்தவ்_தாக்கரே #தேஜஸ்வி #பிரதமர் #மோடி #தமிழகம் #புதுச்சேரி #என்_டி_ஆர். #தேவகவுடா #சரண்சிங் #சரத்பவார் #India_Alliance #BJP #cm_Stalin #Akhilesh_Yadav #Uddhav_Thackeray #Tejashwi #PM #Modi #Tamil_Nadu #Puducherry #N_T_R. #Dev_Gowda #Saransingh #Sarathpawar

You might also like