காங்கிரசில் இணைகிறார் ஜெகன் மோகன்?

ஆந்திர அரசியலில் அதிரடித் திருப்பம்

அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. காங்கிரஸ் கட்சியிலும், இதே போன்றதொரு செங்குத்தான பிளவு உண்டாகி பின்னர் பலமுறை அந்தக் கட்சி சிதறுண்டது.

இந்திரா காந்தி காலத்தில் தேசிய அளவில் சரத்பவார், மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தினார். ராஜீவ் காந்தி காலத்தில், வி.பி.சிங் காங்கிரசில் சிறிய விரிசலை உண்டாக்கி, புதியக் கூட்டணியை உருவாக்கி, பிரதமராகவே உயர்ந்தார்.

மாநில அளவில் காங்கிரஸ் கட்சி உடைந்து, திரும்பவும் மீண்டு வரமுடியாத பிளவை ஏற்படுத்தியவர்கள் மூன்று பேர். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதுச்சேரியின் ரங்கசாமி, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி. இவர்கள் மூவரும் காங்கிரசில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி கண்டபின் அந்த மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாகக் கரைந்து போனது.

ஜெகன் மோகனின் கதை

இந்தக் கட்டுரையின் கருப்பொருள் ஜெகன் மோகன் ரெட்டி என்பதால் அவரை பற்றி அலசலாம்.

ஜெகன் மோகனின் குடும்பத்தினர் முழுக்க முழுக்க காங்கிரஸ்காரர்கள். இவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர். மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியவர்.

2 முறை ஆந்திர மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். விமான விபத்தில் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த பிறகு, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகனுக்கும், சோனியா காந்திக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

தந்தை வகித்த முதலமைச்சர் பதவியை தனக்குத் தருமாறு கேட்டார் ஜெகன். கொடுக்க மறுத்தார், சோனியாகாந்தி.

இந்த மோதலின் உச்சக்கட்டமாக, காங்கிரசில் இருந்து பிரிந்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதியக் கட்சியை ஜெகன் தொடங்கினார். ஆட்சியைப் பிடித்தார். அதன் பின், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது.

கலங்கி நிற்கும் ஜெகன்

ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல், ஜெகன் மோகனை திகில் அடையச் செய்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

மாறாக, தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 இடங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு மீண்டும் நான்காம் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையில், முன்னணி நிலவரங்கள் வெளிவர ஆரம்பித்த சமயத்திலேயே, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. ஜெகன் ஆட்சியில் அமைச்சராக இருந்த நடிகை ரோஜா, ஆந்திராவில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு சென்னை வரவேண்டிய சூழல் உருவானது.

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐதராபாத்தில், ஜெகன் மோகனின் இல்லத்தின் முன்பகுதியில் இருந்த கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

ஜெகன் கட்சியின் எம்எல்ஏக்களில் சிலர் கட்சித் தாவ தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெகன் மோகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் சிறைசெல்ல நேரிட்டால், 7 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

கட்சியையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள ஜெகனுக்கு தேசியக் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. ஜெகனுக்கு ஆதரவு கரம் கொடுக்க பாஜக முன் வரப்போவதில்லை.

எனவே மனக்கசப்புகளை மறந்து, தாய்க் கட்சியில் அடைக்கலம் புக அவர் தயாராகி வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிடுவது குறித்து ஜெகன் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமாருடனும், ஜெகன் பேச்சு நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ஆகிறார்

ஜெகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரது தாய் விஜயலட்சுமியும் தங்கை ஷர்மிளாவும் பிரிந்து சென்றுவிட்டனர்.

ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய ஷர்மிளா, அதனை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், அண்மையில் நடந்த சட்டப்பேரவை மக்களவைத் தேர்தலில், ஒரு இடத்திலும் காங்கிரஸ் ஜெயிக்கவில்லை.

இதனை பயன்படுத்தியே, காங்கிரசுக்குள் நுழைய ஜெகன், காய் நகர்த்தி வருகிறார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே ஜெகனின் நிபந்தைனையாகும்.

தங்கை ஷர்மிளாவை நீக்கிவிட்டு தன்னை மாநில தலைவராக்கினால் தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸிஸ் இணையத் தயார் என ஜெகன் உறுதி அளித்துள்ளார்.

இந்தத் தகவல்களை சிவக்குமார், சோனியா மற்றும் ராகுலிடம் தெரியப்படுத்தி விட்டார். விரைவில் ஆந்திர மாநில அரசியலில் அதிரடித் திருப்பங்கள் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கடை விரித்த ஜி.கே.மூப்பனார், கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கட்சியில் ஐக்கியமான வரலாறு உண்டு.

– மு.மாடக்கண்ணு

You might also like