இந்தியாவில் நடக்கும் கூட்டு வன்முறை குறித்து குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்களை எழுதிய அறிஞர் பால் ரிச்சர்ட் பிராஸ் (1936-2022) அவர்கள் கடந்த 2022 மே 31 அன்று மறைந்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த அவர் இந்தியாவில் திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்படும் வகுப்புவாத வன்முறைகளின் இயங்கியல் குறித்து கள ஆய்வுகளின் அடிப்படையில் மிக முக்கியமான நூல்களை எழுதி வெளியிட்டவர்.
மதச்சார்பின்மை என்ற கோட்பாடு எவ்வளவு இன்றியமையாதது. அதைத் தற்போது இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் உள்ள பல சிந்தனையாளர்கள் அலட்சியப்படுத்தி வருவது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சுட்டிக் காட்டியவர்.
“கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் தவறாகப் பெயரிடப்பட்டுள்ளன. அவை பல இடங்களில், பல வழக்குகளில் நீண்ட காலத்திற்கு, மீண்டும் மீண்டும், காவல்துறையின் உடந்தையின்றி நடத்தப்பட்டிருக்க முடியாது.
ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவை கலவரங்களைத் தடுக்கவோ அல்லது அவை தொடங்கியவுடன் அவற்றைக் கட்டுப்படுத்தவோ தவறின.
சுருக்கமாகக் கூறினால், இந்தியாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் என்று அழைக்கப்படுபவை, உண்மையில், திட்டமிட்டப் படுகொலைகள், இனச் சுத்திகரிப்பை நோக்கமாகக் கொண்டவை (Forms of Collective Violence, Three Essays Collective, 2005)” என அவர் குறிப்பிட்டார்.
சரண்சிங் குறித்தும், இந்தியத் தேர்தல் அரசியலில் சாதி வகிக்கும் பாத்திரம் குறித்தும் ஆராய்ந்து நூல்களை எழுதியவர்.
கூட்டு வன்முறை (collective violence) என்பது அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கும் தற்கால வகுப்புவாத அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் புரிந்துகொள்ள விரும்புகிற எவரும் அறிஞர் பால் ரிச்சர்ட் பிராஸின் நூல்களைப் படிக்காமல் இருக்க முடியாது.
நன்றி: முனைவர் துரை.ரவிகுமார் எம்.பி