இடதுசாரிகளைத்தவிர, இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், வாரிசுகளை தேர்தல் களத்தில் இறக்கிவிட தவறியதில்லை.
பாஜகவில், எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். அந்தக் கட்சியும் ஆங்காங்கே வாரிசுகளுக்கு இடம் அளிக்கவே செய்கிறது.
காஷ்மீரில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை வாரிசுகள் ஆதிக்கம் பரவி இருப்பது கண்கூடு. நாட்டின் உச்சியில் இருக்கும் காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி. தென்கோடி முனையில் உள்ள குமரியில் விஜய் வசந்த்.
இடைப்பட்ட மாநிலங்களில் அகிலேஷ் யாதவ், ராப்ரிதேவி, தேஜஸ்வி, சரண்சிங் பேரன் சவுத்ரி, நவீன் பட்நாயக், உத்தவ் தாக்கரே, சுப்ரியா சுலே (சரத்பவார் மகள்), சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன், குமாரசாமி உள்ளிட்ட ஒரு டஜன் பேருக்கு மேல் வாரிசுதாரர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டு டஜனை தாண்டும்.
ஸ்டாலின், கனிமொழி, தமிழிசை, தமிழச்சி, தயாநிதி, கலாநிதி வீராசாமி, உதயநிதி, ரவீந்திரநாத் மற்றும் துரை முருகன், டிஆர் பாலு, பொன்முடி, கே.என்.நேரு, ப.சிதம்பரம், டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) உள்ளிட்டோரின் மகன்கள்.
நேரு குடும்பம்:
காங்கிரஸ், தேசிய அளவிலான அரசியல் கட்சி என்பதால் ஜவஹர்லால் நேரு குடும்பத்தில், வாரிசுகளின் ஆதிக்கம், பிற கட்சிகளை காட்டிலும் கொஞ்சம் அதிகம்.
நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் நாட்டின் உச்ச அதிகார பீடமான பிரதமர் நாற்காலியில் இருந்தவர்கள்.
சஞ்சய், சோனியா, மேனகா, ராகுல், வருண் ஆகியோர் எம்.பி.க்களாக இருந்தவர்கள். மேனகா, மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
நேரு குடும்பத்தில், தேர்தலில் போட்டியிடும் தகுதி கொண்ட வாரிசுகளில் பிரியங்கா மட்டும் தேர்தல் அரசியலைத் தவிர்த்தே வந்தார். இப்போது, அரசியல் சுனாமி, பிரியங்காவையும் தேர்தல் கடலுக்குள் இழுத்து வந்துவிட்டது.
தேடிவந்த வாய்ப்பு
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வாகை சூடினார்.
ஏதேனும் ஒரு தொகுதியை கைவிட வேண்டிய சூழலில், வயநாடு தொகுதி எம்.பி.பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்து விட்டார்.
வயநாடு தொகுதியில் ராகுலுக்கு பதிலாக அவரது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனால் வயநாடு மீண்டும் ஒரு நட்சத்திர தொகுதியாக கவனம் ஈர்த்துள்ளது.
இப்போது 52 வயதாகும் பிரியங்கா, முதன்முதலாக கடந்த ஜனவரி 2019-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதுவே பிரியங்காவின் தீவிர அரசியல் பிரவேசத்துக்கான, அடித்தளமாக அமைந்தது. 2020-ம் ஆண்டு உபி.யின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பிரியங்காவின் வெற்றி வாய்ப்பு
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார், அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் தோற்றுப்போனார்.
ஆனால் வயநாட்டில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார், ராகுல்.
இந்த முறை வயநாட்டில் ராகுலின் வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்தே இருந்தது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.பி.ஐ. வேட்பாளர் ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வீழ்த்தினார்.
வாக்கு வித்தியாசம் குறைந்தாலும் வயநாடு, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே கருதப்படுகிறது. பிரியங்கா இங்கே எளிதாக வென்றுவிடுவார் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து.
“பிரியங்காவை 7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வயநாடு தொகுதியில் வெற்றி பெறச்செய்வோம்” என கேரள மாநில காங்கிரசார் சபதம் மேற்கொண்டுள்ளனர்.
அவரை எதிர்த்து கடந்த முறை போட்டியிட்ட ஆனி ராஜாவே மீண்டும் போட்டியிடுவாரா? என்பது தெரியவில்லை.
– மு.மாடக்கண்ணு