தேர்தலைப் புறக்கணித்த அதிமுக!

விக்கிரவாண்டியில் யாருக்கு வெற்றி?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த ஒரு மாதத்தில் நடைபெறும் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது.

’திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி, சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – எனவே இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது’ என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிகவும், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. ‘’இன்றைய காலக்கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன – ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது – எனவே இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

மும்முனைப் போட்டி

அதிமுகவும், தேமுதிகவும் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் களத்தில் உள்ளன.

காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள், திமுகவை ஆதரிக்கின்றன. பாஜக போன்ற கூட்டணி கட்சிகள், பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல், தனித்து நிற்கிறது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக, தனது வேட்பாளராக சி.அன்புமணியை நிறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா நிறுத்தப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

அதிமுக இந்தத் தேர்தலை புறக்கணித்திருப்பது, பல தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறது. ‘இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியான முடிவு அல்ல – தேர்தலை புறக்கணிக்க திமுகவே காரணம்‘ என சசிகலா கூறியுள்ளார்.

‘பாமக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மேலிட உத்தரவின் பேரில், இந்தத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது’ என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

வெற்றி யாருக்கு?

விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் சமபலத்துடன் உள்ள தொகுதியாகும். பாமகவும் வலுவாக உள்ள தொகுதி. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக 41 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அதே ஆண்டு விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சுமார் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. அப்போது, அதிமுகவை பாமக ஆதரித்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக வெறும் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் தான், திமுகவிடம் தோற்றது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் திமுக கூட்டணியான விசிகவுக்கு 72 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. அதிமுகவுக்கு 65 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. வெறும் 3.7 % மட்டுமே வித்தியாசம்.

ஆளுங்கட்சியாக இருப்பதால், திமுக, சர்வ பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. வெற்றி எளிது தான். ஆனால் ப.சிதம்பரம் சொன்னது போல், அதிமுகவின் வாக்குகள், பாமகவுக்கு விழுமானால், திமுகவின் வெற்றி கேள்விக்குறி என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து.

– மு.மாடக்கண்ணு

You might also like