4-வது முறையாக ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு!

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்துக்கும் கடந்த 13-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜக ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. காங்கிரஸ் கட்சியும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனி அணியாகக்  களமிறங்கின.

மும்முனைப் போட்டி நிலவிய ஆந்திராவில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வந்தது.

சந்திரபாபு நாயுடு அபார வெற்றி

175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள அந்த மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றது.

ஜனசேனா கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது.

ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு ஜெகனின் கட்சி படுதோல்வி அடைந்தது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெகன் கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்சியின் வேட்பாளராக நகரி தொகுதியில் நடிகையும், அமைச்சருமான ரோஜா போட்டியிட்டார். ஆனால் அவர் தோற்றுப்போனார்.

அவரை, தெலுங்கு தேசம் கட்சியின் பானு பிரகாஷ், சுமார் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை.

தெலுங்குதேசம் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வென்றுள்ள பவன் கல்யாண், எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, அமோக வெற்றி பெற்றார்.

அமராவதியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் 4-ம் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

ஒடிசாவிலும் ஆளும் கட்சி தோல்வி

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. அந்த மாநிலத்தில் மொத்தம் 147 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.

அங்கு 24 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருக்கிறார்.

மீண்டும் வென்றால், 6-வது முறையாக அவர் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சி 51 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

பாஜக 78 இடங்களை கைப்பற்றி ஒடிசாவில், முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது. சுயேச்சைகள் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

– மு.மாடக்கண்ணு

You might also like