மத்தியில் புதிதாக அமைய இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, செய்தி ஊடகங்களின் பார்வையில் டெல்லி மறுபடியும் பரபரப்பான தலைநகரமாக மாறி இருக்கிறது. பல கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு விவாதங்களும் வியூகங்களும் வகுக்கப்பட்டு, நாளைய எதிர்காலம் பற்றிய பல்வேறு செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மாநிலக் கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறார்கள். இதில் அவர்களுடைய அடுத்தக் கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதையொட்டி பல்வேறு வியூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, தான் இன்னும் பாஜக தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதேசமயம் நிதிஷ்குமாரும் அவருக்கு எதிராக தேர்தல் களத்தில் எதிர்த்து நின்ற தேஜஸ்வியாதவும் டெல்லிக்கு ஒரே விமானத்தில் சென்றிருப்பது ஊடகங்களின் பார்வையில், ஒரு பரபரப்பான செய்தியாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் அடுத்தடுத்து இரு கூட்டணிக் கட்சிகளுக்கான கூட்டங்களும் இன்று நடக்க இருக்கின்றன. மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து டெல்லியில் என்ன நடக்கலாம்?

பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த கடந்த பத்தாண்டுகால ஆட்சியில், அவர்கள் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்க முடிந்தது.

சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களுடைய பார்வையின்படியே அவர்கள் செயல்பட்டார்கள். சில முடிவுகள் பொதுமக்களுக்கு எதிரான அளவில் கூட இருந்திருக்கின்றன.

ஆனால் இனி கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அத்தகைய ஒரு தனித்த அணுகுமுறையோடு அவர்கள் இனிமேல் செயல்பட முடியாது. பெருவாரியான மக்களுக்கு எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்து விடமுடியாது.

அந்த விதத்தில் பாஜக தன்னுடைய பொறுப்பிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்காகவும் தற்போதைய சூழ்நிலைக் கருதியும் இறங்கி வந்துதான் ஆக வேண்டும்.

அத்தகைய முடிவுக்கு பாஜக தயாரான நிலையில்தான் இருக்கிறது என்பதுதான் டெல்லியில் இருக்கும் தற்போதைய ஊடகவியலாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

அதனால் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சித் தொடரவே அதிகபட்சமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

– யூகி

You might also like