வேர் நிலைத்தால்தான் கிளைகளும் இலைகளும் செழிக்கும்!

புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் அரசு விழாவானாலும் கழகப் பொதுக்கூட்ட மேடையானாலும் அங்கே குழுமும் அனைவருக்குள்ளும் தன் வாழ்வோடு ஒட்டிய ஏதேனும் ஒரு சிந்தனை பூக்கும் வகையில் தனது உரையை நிகழ்த்திடுவார். 

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கென அவர் தொடங்கிய திட்டங்கள், நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா..! அவ்வாறான நிகழ்வில் ஒன்றான, திருச்சியில் இராணுவத் திடலில் 30.04.1982-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியினை இங்கே காணலாம்:

“தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை, மேனிலை, கல்லூரிநிலை, பல்கலைக்கழக ஆய்வு நிலை என்று ஆறு அடுக்குகள் எப்படி அமைந்தன என்று ஒருமுறை காரில் செல்லும்போது கவனமாகக் கேட்டார்கள்.

கல்வி கற்றவர்களுக்கு அறிவுச் சீர்மை இல்லாமல் ஏன் போகிறது, கல்வி அறிவைத் தீட்டுகிறதா, சிலருக்கு அறிவுக்கூர்மை ஏற்பட்டு வறுமை அவர்களுக்கு பள்ளிக்கதவுகளை மூடிவிட்டதே அதனால் இழப்பு உண்டா என்று கேட்டார்கள்.

அவர் கேட்ட கேள்வியைச் சுற்றி வளைத்து இப்படி என்னால் எழுத முடிந்தது.

கல்வி பழக்கத்தைத் தரும், அறிவு விளக்கத்தைத் தரும், அனுபவம் நிறைவைத் தரும் என்று அவரே விடையும் சொன்னார்.

என்ன இருந்தாலும் பள்ளிக்கல்வி இல்லாதது ஒரு குறையைக் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது என்று அவர் பேசியதை நான் கேட்டு வியந்தேன்.

அனுபவத்தில் பழுத்த கனியின் சாறு சொட்டுவது போல என் நினைவை இனிமையாக்கியது. இருபது நிமிடத்தில் அவர் திடலுக்கு வந்தார். பிறகு முக்கால் மணிநேரம் கழித்த பிறகு எந்தக் குறிப்பும் இல்லாமல் பேசினார்.

பேசி வந்ததற்கும் இந்தப் பேச்சுக்கும் எந்த வகையில் இழையோடுகிறது என்று அவர்கள் தங்கள் போக்கில் உணர்ந்து கொள்வதற்கு இடமிருக்கும் என்றே கருதலாம். அவர் ஆற்றிய உரைவடிவம் வருமாறு:

“பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழக மக்களின் ஆசியுடன் இன்று தொடங்கப்படுகிறது. ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தாய் என்னென்ன சிரமப்படுவாளோ அதைப் போல, தமிழக அரசு, தமிழக மக்களின் ஆதரவில், தொல்லைகளை எல்லாம் மறந்து இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை நிறைவேற்றி வருகிறது.

நேற்றும் இன்றும் நடைபெறுகிற நிகழ்ச்சிகளைக் கண்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்று என்னால் நிச்சயமாக எண்ணிப் பார்க்க முடிகிறது. நாட்டுக்கு என்னென்ன நல்ல பயனுள்ள பணிகளைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்கிறோம் என்பதைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

பெண்களுக்காகத் தனிப் பல்கலைக்கழகம் தொடங்க உறுதி பூண்டு அதனைக் கொடைக்கானலில் தொடங்க இருக்கிறோம்.

கொடைக்கானலில் தொடங்குவதற்கு முக்கியமான காரணம் உண்டு. வேறு இடம் இல்லையா என்று சிலர் கேட்கலாம்.

இந்தியத் துணைக் கண்டத்துடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை அந்தப் பல்கலைக்கழகம்.

உலகளாவிய அளவில் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பும் வகையில், உலக மக்கள் எல்லாம் தொடர்பு கொள்ளும் பல்கலைக் கழகமாக அது உருவாக வேண்டும் என்பதால் அதனைக் கொடைக்கானலில் உருவாக்க விரும்புகிறோம்.

அடுத்த ஆண்டிலாவது காரைக்குடியில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்ற நீண்டநாள் வேட்கை நிறைவேறும் என எண்ணுகிறேன். அதுபோல நெல்லை மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும் என்னும் தீராத வேட்கையை நிச்சயம் நிறைவேற்றி ஆக வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருக்கிறோம்.

மாணவர்களைவிட மாணவியர் அக்கறையோடு படிக்க முயல்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது. நான் எனது கடமைகளை விரைவாகச் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

என்னை முதல்வராக ஏற்று ஆட்சியை அமைக்கச் செய்த மக்களை ஏமாற்றாமல் என் கடமைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும். இந்தத் திடலில் பந்தல் போடலாம் என்று சொல்லப்பட்டது. அந்தச் செலவு தேவையில்லை, வெட்ட வெளியில் வெயில் இல்லாத நேரத்தில் விழா நடத்துவோம்.

காற்றும் வரும். வெயில் நேரத்து நிகழ்ச்சிகளைத் தியாகராச பாகவதர் அரங்கில் நடத்திக் கொள்வோம் என்று நான் சொல்லி அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பல இலட்சம் மக்கள் பகல் நேரத்து நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று குறிப்பிட விரும்புகிறேன்.

திருச்சி, பொன்மலை, ஸ்ரீரங்கம் குடிநீர் சாலை, மின் வசதிக்காக 70 இலட்ச ரூபாய் அரசு அனுமதி அளித்துள்ளது.

கிராமப்புறங்களில் மின்சாரம் கிடைக்கத் தடை ஏற்பட்டால் அதற்குச் சரியான காரணங்களைக் கேட்க அதிகாரிகளைச் சென்னையிலிருந்து அனுப்பி, கிராம மக்களிடம் நேரில் கேட்டறிய இருக்கிறேன்.

100 கோடி ரூபாய்க்குப் பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்படும் திட்டத்தை இன்று இந்தியாவே கவனித்து வருகிறது. அதனை நகல் எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள் என்று மேதகு ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்தே பண்பு வளரவேண்டும், கல்வியால் பழக்கம் வளர வேண்டும், அறிவுச்செடி வளர்ந்து விடுமென்றாலும் கல்வி நீர் ஊற்றுவது கட்டாயமான தேவையாகும் என்பதற்குத்தான் இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன, என் பெயரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பே சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்த எண்ணினேன்.

ஒரு குழந்தை சில்க் சட்டையும், மற்றொரு குழந்தை சாதாரண சட்டையும், அணியும்போது சில்க் சட்டையைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையை, பளபளப்பை உணர்ந்து, அதுபோன்ற சட்டை வேண்டும் என்று அந்தக் குழந்தை தன் பெற்றோர்களைக் கேட்கும்போது,

“அவர்கள் பணக்காரர்கள், நாம் ஏழைகள்”, என்று தாய் தந்தையர் சொல்லும் பதிலிலிருந்து ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

வேற்றுமை உணர்வை குழந்தையின் உள்ளத்தில் அப்போதே ஏற்படுத்தி விடுகிறோம்! ஆனால், சீருடை என்றால் வித்தியாசமான உணர்வு வருவதில்லை.!

நல்ல பணிகளுக்கு நாம் செலவு செய்ய தாராளமாக முன் வர வேண்டும். 2 அல்லது 3 கட்சிகள் சேர்ந்து ஆட்சியை அமைத்திருந்தால் எப்படிப்பட்ட நிலை வந்திருக்கும் என்பதனை யோசித்துப் பார்க்க வேண்டும்.

பல்கலைக்கழகத்திற்கு பாரதிதாசன் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்ல, மற்றொருவர் ‘வேண்டாம்’ என்று சொன்னால், என்ன ஆகும்?

பல்கலைக் கழகங்களை அமைப்பது மட்டுமல்ல, அங்கே மாணவர்கள் எப்படி வளரவேண்டும் என்ற திட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நமது தமிழ்நாட்டில் 2 சதவிகிதம் பேர்தான் கல்லூரிக்குச் செல்கிறார்கள் என்ற நிலை இருக்கிறது.

கேரளத்தில் மிக அதிகமான அளவில் செல்கிறார்கள். நம்மை விடச் சிறிய மாநிலமான கேரளம், கல்வியில் மிகவும் முன்னேறியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கல்விக்கு நாம் செலவிடும் தொகைவிழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது.

இன்று காலையில் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர். அதனைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு 1 கோடி மரம் வளர்க்கப்பட்டுவிட்டால் திருச்சி மாவட்டம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நான் ஒரு ஓவியனாக இருந்தால் படம் தீட்டியும் காட்ட முடியும். அந்த மரங்களின் உதவியினால் எவ்வளவு மழை கிடைக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்று உழைப்பவர்கள், நாளைய எதிர்காலத்திற்கு வழிகாட்ட முடியும். நான் 3ஆவது வரைதான் படித்தேன்; மேற்கொண்டு படிக்க வழியில்லை.

இன்று படிப்பு உங்களைத் தேடி வருகிறது. நான் வேலைக்குப் போக நினைத்தேன்.

காரணம் என் குடும்பத்தின் வறுமை. வறுமையை வெல்வதற்குத் திறமையும் வேண்டும்.

இன்று நீங்கள் தொழில் தொடங்க அரசு உதவி தருகிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை அவர்கள் வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.

அரசு, தனிப்பட்டவர்கள் அமைப்பு எல்லாம் ஒன்று கூடி இந்தப் பணியைச் செய்ய வேண்டும்” என்று புரட்சித்தலைவர் நிகழ்த்திய உரை நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் மனத்தில் கல்விதான் வேர் என்ற சிந்தனை வித்திடச் செய்தது.

கல்விதான் வேர் என்ற சிந்தனையும் வறுமையை வெல்வதற்கு திறமையும் ஒரு துணை என்ற கருத்தையும் விதைத்தன.

*****

நூல்: மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம்!
ஆசிரியர்: ஔவை நடராசன்
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை – 113

பக்கங்கள்: 537
விலை: ரூ.450/-

You might also like