மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 16-ம் தேதி அறிவித்தது. 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதியை அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
முதல் கட்டத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் அன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி 88 தொகுதிகளிலும், 3-ம் கட்டத் தேர்தல் கடந்த 7-ம் தேதி 94 தொகுதிகளிலும், 4-ம் கட்டத் தேர்தல் கடந்த 13-ம் தேதி 96 தொகுதிகளிலும் நடைபெற்றது.
5-ம் கட்டத் தேர்தல் கடந்த 20-ம் தேதி 49 தொகுதிகளிலும், 6-ம் கட்டத் தேர்தல் 25-ம் தேதி 57 தொகுதிகளிலும் நடைபெற்றது.
வாரணாசியில் நாளை தேர்தல்
7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், பஞ்சாபில் 13 தொகுதிகள், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகள், சண்டிகரில் 1 தொகுதி, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள் நாளைய தினம் தேர்தலை எதிர்கொள்கின்றன.
நாளை வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்தத் தொகுதியில் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் போட்டியிடுகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் வீரபத்ரசிங் மகன் விக்ரமாதித்ய சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேற்கு ங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி, களம் இறங்கியுள்ளார்.
வாக்குப்பதிவு நடைபெறும் இந்த 57 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்தத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
– மு.மாடக்கண்ணு