இமயமலை அடிவாரத்தில், நாட்டின் கிரீடமாக உள்ள அழகிய மாநிலம் ஜம்மு காஷ்மீர். இந்த மாநிலத்தின் குளிர்கால தலைநகராக ஜம்முவும், கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரும் உள்ளன.
நாட்டிலேயே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள, மாநிலம் ஜம்மு-காஷ்மீர். (இப்போது யூனியன் பிரதேசம்) இந்துக்கள் 28.44 சதவீதமும், இஸ்லாமியர்கள் 68.32 சதவீதமும் உள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக வேளாண்தொழில் உள்ளது. அரிசி, சோளம், கோதுமை ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் உற்பத்தி இங்கு அதிகம்.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பைத் தரக்கூடியவை- சுற்றுலாவும், கைவினைப் பொருட்கள் தயாரிப்பும்.
வாரிசு அரசியலின் ஊற்றுக்கண்
இந்தியாவில் வாரிசு அரசியலை ஆரம்பித்து வைத்த முதல் மாநிலம், ஜம்மு-காஷ்மீர்.
காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் தவிர்த்து, இங்கு முதலமைச்சர்களாக இருந்த மற்ற அனைவருமே, வாரிசுகள் தான்.
ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முப்தி முகம்மது சையத், மெகபூபா முஃப்தி ஆகியோர் உதாரணங்கள்.
ஜம்மு – காஷ்மீரில் 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும், பாஜக, காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையே பிரதான சக்திகளாக உள்ளன.
முந்தைய தேர்தல் முடிவுகள்
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, ஜம்மு-காஷ்மீரில் 6 தொகுதிகள் இருந்தன. பாஜக 3 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
2019 மக்களவைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன.
மொத்தமுள்ள 6 தொகுதிகளில், பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளில் வென்றது.
மோடியின், அதிரடி
இந்த தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது.
அதோடு, ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன.
லடாக் பிரிந்ததால், ஜம்மு காஷ்மீரின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறைந்தது.
இந்த பின்னணியில் தான், இப்போதைய மக்களவைத் தேர்தலை ஜம்மு – காஷ்மீர் எதிர்கொள்கிறது.
மொத்தமுள்ள 5 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, மே 7-ம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, மே 13-ம் தேதி நான்காம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி, மே 20-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தலில் ஒரு தொகுதி என வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
வெற்றி யாருக்கு?
இந்தத் தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு அணியாகவும், ’இந்தியா ’கூட்டணி ஒரு அணியாகவும் எதிர்கொள்கின்றன.
பாஜக கூட்டணியில், சில சிறிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கூட்டணியில், பாஜக 2 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி 2 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
’இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய இரு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேசிய மாநாட்டு கட்சி மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும் நிற்கின்றன.
மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளில் தனித்து நிற்கிறது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ‘இந்தியா’ கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாஜக கூட்டணி 2 தொகுதியில் வெல்லும் என கணிப்பில் தெரியவந்துள்ளது.
கணிப்புகள் நிஜமாகுமா என்பதை அறிய ,ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜுன் 4 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்..
– மு.மாடக்கண்ணு