நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் ஐந்தாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (மே-20) நடைபெற உள்ளது.
6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, ஒடிசா, பீகார் மாநிலங்களில் தலா 5, ஜார்கண்ட் 3, லடாக் 1, ஜம்மு காஷ்மீர் 1 என 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்தத் தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் களம் இறங்கும் லக்னோ, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிடும் அமேதி ஆகிய தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை.
இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தலைவர்கள் உச்சக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘’நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது – மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த ’இந்தியா’ கூட்டணி முயல்கிறது” என குற்றம் சாட்டினார்.
‘ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்…’
“காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்’’ என பிரதமர் மோடி, தனது பிரச்சாரத்தில் ஆவேசமாக தெரிவித்தார்.
இதனிடையே டி.வி. நேர்காணலில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம், ”நீங்கள் எதற்காக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவது கிடையாது?” என வினா எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மோடி, “ஊடகங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு அரசியல் கட்சி ஆதரவு நிறுவனமாகவே உள்ளன – செய்தியாளர்கள் தங்கள் சொந்த கொள்கைகளையே முன்னிறுத்துகின்றனர் – இதுபற்றி மக்களும் நன்கு அறிந்துள்ளனர்.
முன்பெல்லாம் ஊடகங்கள் அடையாளம் தெரியாதவையாக இருந்தன – தற்போது நிலைமை மாறிவிட்டது – அதனால்தான் மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் மட்டும் பதில் அளிக்கிறேன்” என தெரிவித்தார்.
சோனியா உருக்கம்
ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, ‘’20 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள் – இது என் வாழ்வின் மிகப் பெரிய சொத்து” என்று குறிப்பிட்டார்.
“ரேபரேலி எனது குடும்பம் – அதேபோன்று அமேதியும் எனது வீடு – என் வாழ்வின் இனிய நினைவுகள் மட்டும் இங்கு இணைக்கப்படவில்லை – எங்கள் குடும்பத்தின் வேர்கள் கடந்த 100 ஆண்டுகளாக இந்த மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன” என சோனியா தெரிவித்தார்.
“உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணர விடவில்லை – என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது – என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் – நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும் – ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்’’ என உருக்கமாக சோனியா கூறினார்.
– மு.மாடக்கண்ணு.