மக்களவைத் தேர்தல் – 45 கோடி பேர் வாக்களிப்பு!

வாக்குப்பதிவை அதிகரிக்கத் திட்டம்

மக்களவைத் தேர்தலை, 7 கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

முதல் கட்டத் தேர்தலில் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டத் தேர்தலில் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டத் தேர்தலில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம், அருணாலப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நடந்து முடிந்துள்ளது.

முதல் நான்கு கட்ட வாக்குப் பதிவில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை நடந்து முடிந்த நான்கு கட்டத் தேர்தலில், 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.

ஓட்டுப்பதிவை அதிகரிக்கத் திட்டம்

எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘’தேர்தலில் மக்கள் திரளாக வந்து வாக்களித்தால் தான், நமது ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்த முடியும்.

தேர்தல் நாளை விடுமுறை தினமாக கருதாமல், பெருமைக்குரிய நாளாக நினைத்து அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு திட்டமிட்டுள்ளோம்” என அவர் கூறினார்.

’’பி.எஸ்.என்.எல். ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தொலைபேசி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் பிரச்சாரங்களை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கூகுள், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களும் எங்களுடன் இணைந்து வாக்குப்பதிவை அதிகரிக்கப் பிரச்சாரம் செய்ய உள்ளன” என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

– மு.மாடக்கண்ணு

You might also like