நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. இரண்டுக்கும் சேர்த்து மே 13-ம் தேதி அங்கு ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
எந்த மாநிலத்திலும் இல்லாதபடி, 3 வாரிசுகளுக்கு இடையேயான யுத்தமாக ஆந்திர மாநில தேர்தல் களம் பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி.
ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எனும் பெயரில் பிராந்தியக் கட்சி ஆரம்பித்து, ஆட்சிக் கட்டிலைப் பிடித்தார். இப்போது முதலமைச்சராக உள்ள ஜெகனின் கட்சி தனித்து நிற்கிறது.
இன்னொரு வாரிசு, சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியை ஸ்தாபித்த என்.டி.ராமராவின் மருமகன். என்.டி,ஆர். உயிருடன் இருக்கும்போதே நாயுடு, அந்தக் கட்சியைத் தனது கைக்குள் கொண்டு வந்துவிட்டார்.
வழக்கு, கைது போன்ற பிரச்சினைகளை அண்மையில் எதிர்கொண்ட சந்திரபாபு நாயுடுவின் கட்சி, இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
மூன்றாவது வாரிசு, அரசியலுக்கு புதிது. ஆனால் அரசியல் ரத்தம். அவர், ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா. முதலமைச்சர் ஜெகன் மோகனின் உடன் பிறந்த தங்கை.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு ’ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா காங்கிரஸ்’ எனும் கட்சியை கொஞ்ச காலத்துக்கு முன்பு ஆரம்பித்தார். வெற்றிக்கனி கிட்டவில்லை. இதனால், தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். உடனடியாக ஷர்மிளாவுக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
மும்முனைப் போட்டி
ஆந்திராவில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. யாருடைய தயவும் இல்லாமல், ஜெகன் கட்சி 25 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பாஜகவுக்கு 6 இடங்களும், ஜனசேனாவுக்கு 2 இடங்களும், தெலுங்கு தேசம் ஒதுக்கியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியின் பிரதான அங்கமான காங்கிரஸ், 23 தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது.
இந்த அணியில் இடம் பிடித்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. ஷர்மிளா, கடப்பா மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.
பெயரளவில் மும்முனைப் போட்டி என்றாலும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையேதான் நிஜமான போட்டி.
யாருக்கு செல்வாக்கு?
கடந்தத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காத காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும், அதே முடிவுதான் காத்திருக்கிறது. இருப்பினும் கணிசமான ஓட்டுகள் வாங்குவது ஷர்மிளாவின் லட்சியமாக உள்ளது.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ள ஜெகன் மோகன், புதிய ‘டெக்னிக்’ ஒன்றை கையாண்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் அல்லது சினிமா பிரமுகர்களை நியமிப்பது வழக்கம், முதன்முறையாக 12 சாமானியர்களை தேர்ந்தெடுத்து தனது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்திருக்கிறார், அவர்.
4 இல்லத்தரசிகள், 2 விவசாயிகள், ஒரு ஆட்டோ ஓட்டுனர், ஒரு தையல்காரர், 4 ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என மொத்தம் 12 பேரை ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்துள்ளார்.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்மோகன் ரெட்டி செய்துள்ள சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்வார்கள்.
ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, ஷர்மிளா ஆகிய மூன்று வாரிசுகளுக்கும், இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம் தான்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 இடங்களில் வெல்லும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆந்திர மக்கள் போல் நாமும், ஜுன் 4-ம் தேதி வரை இறுதி தீர்ப்புக்குக் காத்திருப்போம்.
– மு.மாடக்கண்ணு