நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, 2 ஆம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள் விபரம்:
மாநிலம் தொகுதிகள்
கேரளா 20
கர்நாடகா 14
ராஜஸ்தான் 13
மகாராஷ்டிரா 8
உத்தர பிரதேசம் 8
மத்திய பிரதேசம் 6
பீகார் 5
அசாம் 5
மேற்குவங்கம் 3
சத்தீஸ்கர் 3
ஜம்மு-காஷ்மீர் 1
திரிபுரா 1
மணிப்பூர் 1
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடக்க இருந்தது. அந்த தொகுதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி, மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனால் அங்கு வாக்குப்பதிவு அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் அமோகம்
நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
சிறு சிறு அசம்பாவித சம்பவங்களை தவிர, அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது.
கொளுத்தும் வெயிலிலும் மக்கள் உற்சாகத்துடன் ஓட்டுப்போட்டனர்.
2-ம் கட்ட தேர்தலில் சராசரியாக 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக திரிபுராவில் 79.5 சதவீத வாக்குகள் பதிவானது.
அதற்கு அடுத்த படியாக மணிப்பூரில் 78 % வாக்குகள் பதிவானது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 55% வாக்குகளே பதிவாகியுள்ளது.
கேரள மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன், கண்ணூரில் உள்ள வாக்குசாவடியில் தனது, ஓட்டைப்பதிவு செய்தார்.
அப்போது பேட்டி அளித்த அவர், ’கேரளாவில் உள்ள 20 தொகுதியிலும் நாங்களே ஜெயிப்போம் – பாஜக கட்சி ஒரு இடத்திலும் வெல்லாது – அந்த கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
ராகுல் தொகுதியில் மக்கள் ஆர்வம்
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா, பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அங்கு 72% ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
சிறப்பு விமானங்களில் வந்த கேரள வாசிகள்
தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக அரபு நாடுகளில் வசிக்கும் கேரள வாசிகள் சிறப்பு விமானங்களில் பறந்து வந்தனர்.
ஐக்கிய அமீரகத்தில் உள்ள கேரள முஸ்லிம் கலாச்சார கழகம், 5 சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் ஏராளமானோர் பயணித்து, சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்து விட்டு திரும்பி சென்றனர்.
இது தவிர, ஆயிரக்கணக்கானோர் சாதாரண விமானங்களில் முன்பதிவு செய்து கேரளாவுக்கு வந்து வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் தவறாமல் வாக்களிப்பதை, அரபு நாடுகளில் வசிக்கும் கேரள வாசிகள், ஒரு கடமையாகவே வைத்துள்ளனர்.
– பி.எம்.எம்.