கன்னியாகுமரியில் காங்கிரசுடன் முட்டிமோதும் பாஜக!

இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ளது, கன்னியாகுமரி.

தமிழக அரசியல் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மற்ற மாவட்டங்களோடு ஒட்டாமல் பிரத்யேக அரசியல் செய்து  தனித்தீவாக காட்சி அளிக்கிறது கன்னியாகுமரி.

மற்ற எந்த மாவட்டத்திலும் இல்லாத அபூர்வமாக, திராவிடக் கட்சிகளான இரு கழகங்களும் இங்கே மூன்றாம், நான்காம் இடத்தில் தான் உள்ளன.

தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் தான் இங்கே பிரதான போட்டியாளர்கள்.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் போதும்.

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.

குமரி மாவட்டத்தில் பெரிதாக செல்வாக்கு இல்லாத பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தது.

அந்த தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு  மூன்றாவது ஸ்தானம்.

திமுக, நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு, ‘டெபாசிட்’டை பறி கொடுத்தது.

தமிழகத்தின் 39 தொகுதிகளில், தனித்து களம் இறங்கிய காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் ‘டெபாசிட்’டை இழக்க, கன்னியாகுமரியில் மட்டும் தான் காப்புத் தொகையை காப்பாற்றிக் கொண்டது.

அதற்கு முந்தைய தேர்தல்களிலும் சரி.. பிந்தைய தேர்தல்களிலும் சரி.. இது தான் கன்னியாகுமரியின் அரசியல்  நிலவரம்.

காங்கிரஸ் கோட்டை

1957-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தத் தொகுதி, 18 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி, 11 முறை வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரசில்  இருந்து பிரிந்த தமாகா இருமுறை வென்றுள்ளது.

ஓட்டுகள் பிரியும் சூழல் நிலவிய இரு சந்தர்ப்பங்களில் பாஜக ஜெயித்துள்ளது.

ஸ்தாபன காங்கிரஸ் ஒரு முறை வென்றது.

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் பலத்தில் ஆளுக்கொரு முறை வென்றுள்ளனர்.

பல்துறை ஆளுமைகளை தந்த பூமி

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு நிலத்திணைகளை கொண்டது கன்னியாகுமரி.

இங்குள்ள, குமரிமுனை சர்வதேச சுற்றுலா ஸ்தலம்.

ஏராளமான ஆன்மிக தலங்களும் இங்கு உள்ளன.

புகழ்பெற்ற தலைவர்களையும், கவிஞர்களையும், திரைத்துறை ஆளுமைகளையும் இந்த மண், ஈன்றுள்ளது.

இயற்கை வளம் கொழிக்கும், அற்புதமான பூமி.

புவனா ஒரு கேள்விக்குறி, அலைகள் ஓய்வதில்லை, வருஷம்-16, உயிரே உனக்காக என ஏராளமான சினிமாக்கள், கன்னியாகுமரியின் வனப்பை பருகிச்சென்ற படங்கள்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

முக்கிய வேட்பாளர்கள்

கன்னியாகுமரி தொகுதியில் 22 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் சார்பில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் மீண்டும்  போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளராக முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதிமுக, பசலியான் நசரேத் என்பவரையும், நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் என்ற பொறியாளரையும் நிறுத்தியுள்ளன.

செல்வாக்கு யாருக்கு?

நான்கு முனைப் போட்டி என ஊடகங்களில் சொல்லப்பட்டாலும், காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே தான் கன்னியாகுமரியில் நிஜமான போட்டி.

கடந்த  2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அடங்கிய 6 தொகுதிகளில் 3 இடங்களில் காங்கிரஸ் வாகை சூடியது.

பாஜக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வென்றன.

இந்த முறை பாஜக கூட்டணி வைத்துள்ள பாமக, அமமுக போன்ற கட்சிகள் இந்தத் தொகுதியில்  இல்லை. தனது கட்சி ஓட்டுகளையே முழுக்க முழுக்க நம்பியுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான திமுக, கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டு வங்கி உள்ளது.

நடுநிலை வாக்காளர்கள், புதிய தலைமுறையினரே இந்தத் தொகுதியில் இந்த முறை வெற்றி, தோல்வியை முடிவு செய்யப் போகிறார்கள்.

– பி.எம்.எம்.

You might also like