தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.
சென்னையில் இதயம் என வர்ணிக்கப்படும் தியாகராயநகர் சட்டசபைத் தொகுதி, தென் சென்னைக்குள் தான் அடங்கியுள்ளது. தி.நகரை ‘வணிகநகர்’ என்றும் அழைப்பார்கள்.
பழைய மகாபலிபுரம் சாலை என முன்னர் அழைக்கப்பட்டு, இப்போது ராஜீவ்காந்தி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதி, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் செயல்படும் இடம்.
இது தவிர திரைப்பட ஸ்டூடியோக்கள், பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலங்கள், புகழ் பெற்ற கல்வி நிறுவனக்களும் இங்கு உள்ளன.
1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் இதுவரை 17 தேர்தல்கள் நடந்துள்ளன. திமுக 9 முறை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளது.
மிகப்பெரும் தலைவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பெருமையை கொண்டது, இந்த தொகுதி.
ஒரு கூடுதல் தகவல்.
இந்த தொகுதி உருவாகி, 34 ஆண்டுகளுக்குப் பின்னர், 1991-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக அதிமுக வெற்றியை ருசித்தது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.ஸ்ரீதரன் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார்
டி.டி.கே.- அண்ணா – ஆர்.வி.
மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, இந்த தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், ஆகிய ஆளுமைகள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி இது.
மத்திய அமைச்சராக பதவி வகித்த முரசொலி மாறன், இந்த தொகுதியில் இருந்து தான் முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரபல நடிகை வைஜெயந்திமாலா, இரண்டு முறை இந்தத் தொகுதியில் எம்.பி.யாக இருந்துள்ளார்.
திமுகவின் டி.ஆர்.பாலு, தொடர்ச்சியாக 4 முறை தென் சென்னை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
மறுசீரமைப்புக்குப் பின், தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 தொகுதிகள் இணைக்கப்பட்டன.
இதில், சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதி, தமிழகத்தின் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
களம் இறங்கிய வாரிசுகள்
திமுக வேட்பாளராக கடந்த முறை போட்டியிட்டு வென்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவரது தந்தை தங்கபாண்டியன், கருணாநிதி அரசில் அமைச்சராக இருந்தவர். சகோதரர் தங்கம் தென்னரசு, இப்போது அமைச்சர்.
இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றுப்போனார்.
பின்னர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் கலந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன், ஜெயவர்தன், அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜெயவர்தன், கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
நாம் தமிழர் கட்சி, தமிழ்செல்வி என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
இந்த தேர்தலில் தேமுதிக மட்டுமே அதிமுக கூட்டணியில் உள்ளது. பாஜக அணியில் உள்ள பாமகவுக்கு தென் சென்னையில் கணிசமான ஓட்டுகள் உண்டு.
கடந்த தேர்தலில் தமிழச்சி தங்கபாண்டியன், 5 லட்சத்து 64 ஆயிரத்து 812 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார்.
அவருக்கு அடுத்த படியாக வந்த ஜெயவர்தன், 3 லட்சத்து 2 ஆயிரத்து 69 வாக்குகள் வாங்கினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், தென் சென்னை தொகுதியில் உள்ள 6 தொகுதிகளில் ஐந்தை திமுக அள்ளியது. வேளச்சேரியில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
’காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக என வலுவான கூட்டணி இருப்பதால் மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியன் எளிதாக வெல்வார்’ என்பது திமுகவினரின் வாதம்,
’சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது, தமிழச்சி தங்கபாண்டியன், பல பகுதிகளுக்குச் செல்லவில்லை – எனவே அவர் மீது தொகுதி மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது’ என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்வாதம்.
மக்கள் எண்ணம், ஜூன் மாதம் 4-ம் தேதி தான் தெரியும்.
– பி.எம்.எம்.