சென்னை ‘ரோடு ஷோ’: மனதை வென்றதாக மோடி நெகிழ்ச்சி!

தங்கள் அபிமான தலைவர்களின் உரையை கேட்கவும், அவர்கள் முகத்தைக் காணவும், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் குவியும் இடம் பொதுக்கூட்டம்.

சாலைகளில் திரண்டிருக்கும் மக்களை தலைவர்கள், நேரிடையாக சென்று பார்த்து அவர்களை உற்சாகப்படுவது, ’ரோடு ஷோ’ எனப்படும் வாகனப் பேரணி.

வட இந்திய நகரங்களில் ‘ரோடு ஷோ’க்கள் சகஜமான ஒன்று. தமிழகத்தில் அபூர்வமான நிகழ்வு. பிரதமர் மோடி அண்மையில் கோவையில் நடந்த ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தலைநகர் சென்னையில் முதன்முதலாக மோடியின் ‘ரோடு ஷோ’வுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொள்ள அவர் தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ, காரில் புறப்பட்ட மோடி, தியாகராயநகர் பாண்டி பஜாரில் ‘ரோடு ஷோ’ தொடங்க இருந்த பனகல் பூங்காவுக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

வேட்டி-சட்டையில் மோடி

அங்கு மேளதாளங்கள் ஒலிக்க, செண்டை மேளங்கள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் மோடி புறப்பட்டார்.

அந்த வாகனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சென்னை பாஜக வேட்பாளர்களும் உடன் சென்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி – சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

அவர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்து, கையசைத்து, தாமரை சின்னத்தை காண்பித்தவாறே பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு மோடி பிரச்சாரம் செய்தார்.

40 நிமிடங்கள் நடந்த ‘ரோடு ஷோ’

பெண் தெய்வங்கள் போன்று வேடம் அணிந்திருந்த பெண்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

வழிநெடுகிலும் தேச பக்தி பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டன. ‘என் குடும்பம் மோடி குடும்பம்’ என்ற பதாகைகளுடன் பங்கேற்ற தொண்டர்கள், ‘வேண்டும் மோடி.. மீண்டும் மோடி’ என்று கோஷமிட்டனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோடியின் புகைப்படம் கொண்ட முகமூடி அணிந்து வந்திருந்தனர்.

சரியாக 7 மணிக்கு மோடியின், பிரச்சார வாகனம் தேனாம்பேட்டை சிக்னலை வந்தடைந்தது. அது தான், வாகனப் பேரணியின் நிறைவுப் பகுதியாகும்.

மொத்தம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மோடியின் வாகனப் பேரணி, 40 நிமிடங்களை எடுத்துக்கொண்டது.

‘ரோடு ஷோ’ முடிந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கிய மோடியுடன் பாஜக வேட்பாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை ஆளுநர் ரவி வரவேற்றார். இரவில் ஆளுநர் மாளிகையில் மோடி ஓய்வு எடுத்தார்.

வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

‘ரோடு ஷோ’ நடைபெற்ற பாண்டி பஜார் பகுதியில் சுமார் 3,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களின் மாடிகளில் இருந்து போலீஸார், கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.

‘ரோடு ஷோ’வை பார்க்க வந்த மக்கள், பாஜக தொண்டர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்

’என் மனதை வென்ற சென்னை’

வாகனப் பேரணி முடிந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.

’’சென்னை என் மனதை வென்றது – ஆற்றல்மிக்க நகரத்தில், இந்த ’ரோடு ஷோ ’என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் –

மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகம் பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது’’ என்று அந்த பதிவில் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக மீது தாக்கு

தனது ‘எக்ஸ்’ தளப்பதிவில், பிரதமர் மோடி, திமுகவை வறுத்தெடுக்கவும் தவறவில்லை. ’பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை – ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது –

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை-குறிப்பாக, சவால்கள் நிறைந்த கடினமான நேரத்தில் கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதை சுட்டிக்காட்டுகிறது-

இந்த முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை’ என்று மோடி அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மேற்கொண்ட, ‘ரோடு ஷோ’ பாஜகவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

– பி.எம்.எம்.

You might also like