அகர வரிசையில் வாக்காளர் பட்டியல்!

பெயரை எளிதாகக் கண்டு பிடிக்கலாம்!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்த தகவல்:

’ஓட்டுப்போடுவதற்கு வரும் வாக்காளர்கள், தங்கள் பெயரை எளிதில் கண்டறிவதற்காக, அகர வரிசைப்படி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது-

தமிழகத்தில்  இதுவரை 2 கோடியே 8 லட்சம் பேருக்கு ‘பூத் சிலிப்’ விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 13-ம் தேதிக்குள் அனைவருக்கும் ’பூத் சிலிப்’ வழங்கப்பட்டுவிடும்.

’பூத் சிலிப்’ கிடைத்த வாக்காளர்கள், அதனை ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச் சென்றால் அங்குள்ள அலுவலர் அதைபார்த்து வாக்குச்சாவடி தொடர்பான தகவல்களை  தருவார்.

ரூ.208 கோடி  பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட  88 கோடியே 12 லட்சம் ரூபாய், ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட  நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நான்கரை கோடி  ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும், பறக்கும் படையினரின் சோதனையில்  சிக்கியுள்ளன.

கைப்பற்ற ரொக்கம் மற்றும் பொருட்களின்  மொத்த மதிப்பு 208 கோடியே 41 லட்சம் ரூபாய்.

ஜுன்  4-ம் தேதி வரை கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி  வாக்குப்பதிவு முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 -ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

அதாவது இப்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து ஜுன் 4-ம் தேதி வரை தொடரும்.

19-ம் தேதிக்குப் பிறகு, தமிழகத்துக்கு அருகே உள்ள மாநிலங்களில், தேர்தல் நடைபெறுவதால், 50 ஆயிரம் ரூபாய்க்கு  அதிகமாக பணம் கொண்டு செல்ல தடை நீடிக்கும்.

சிறப்புப் பேருந்துகள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்புப் பேருந்துகள்  இயக்கப்படும்.

தேர்தல் முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 20-ம் தேதியும், 21-ம் தேதியும் வழக்கமான பேருந்துகளுடன் 1,825 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த தகவலை தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் விமானத்தில் சோதனை

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற ‘ரோடு ஷோ’வில் பங்கேற்ற அவர், திறந்த ஜீப்பில் நின்றபடி, பொதுமக்களைப் பார்த்து கை அசைத்து, தாமரை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

முன்னதாக ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்து தனியார் விமானத்தில் நேற்று காலை சேலம் விமான நிலையம் வந்தார். அப்போது, பறக்கும் படையினர், அவர் வந்த விமானத்தை சோதனை செய்து வீடியோ எடுத்தனர்.

’தமிழிசைக்கு மீண்டும் தோல்வி’

தென் சென்னையில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து திமுக எம்.பி.யும், தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய கனிமொழி, ‘’ஜனநாயக நடைமுறைகளை நசுக்கும் வகையில், ஆளுநர் பதவிகளை பாஜக அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்கிறது” என குற்றம் சாட்டினார்.

”ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, தென் சென்னையில் பாஜக வேட்பாளராக போட்டுயிடும் தமிழிசை சவுந்தரராஜன், மீண்டும் தோல்வி அடையப்போகிறார்” என கனிமொழி கேலி செய்தார்.

கடந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை, கனிமொழியிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

– பி.எம்.எம்.

You might also like