விளவங்கோட்டில் பெண்கள் ‘ராஜ்ஜியம்’!

விஜயதாரணி கோட்டையில் கொடி ஏற்றப்போவது யார்?

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் அண்மையில் இணைந்தார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதனால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

கேரள மாநில எல்லைக்கு அருகில் உள்ளது, விளவங்கோடு தொகுதி. மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில் இதுவரை 15 முறை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

10 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது.

பெண்களை களம் இறக்கிய பிரதான கட்சிகள்

இடைத்தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். முக்கிய 4 கட்சிகளும் பெண் வேட்பாளர்களையே களம் இறக்கியுள்ளன. காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் நிறுத்தப்பட்டுள்ளார்.

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் எனும் சிறப்பு தாரகை கத்பர்ட்டுக்கு உண்டு.

பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் மைலோடு கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

விஜயதாரணியின் கோட்டை

கடந்த 3 தேர்தல்களில், விளவங்கோடு தொகுதியை, தனது கோட்டையாகவே வைத்திருந்தார், விஜயதாரணி.

இந்தத் தொகுதியில் அவர் 2011 ஆம் ஆண்டு முதன் முதலாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் 62, 898 ஓட்டுகள் பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லீமாரோசை 23,789 வாக்குகள் வித்தியாசத்தில் வீழத்தினார், விஜயதாரணி. 2016-ம் ஆண்டு தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் – 68,789.

பாஜக வேட்பாளர் தர்மராஜை, 33, 143 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் 87,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ஜெயசீலன் 58,804 வாக்குகளைப் பெற்று 2-வது இடம் பெற்றார். ஓட்டு வித்தியாசம் 28, 669.

இவருக்கு முன்பாக காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சுந்தரதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.மணி ஆகியோரும் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

ரப்பர் தொழில் பூங்கா அமைத்தல், தேன் ஆராய்ச்சி மையம் அமைத்தல், தேனுக்கு அரசின் விலை நிர்ணயம் செய்தல், மீன் வர்த்தகத்தை மேம்படுத்துதல் போன்றவை இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

கட்சிகள் செல்வாக்கு

பல தரப்பட்ட சமூகத்தினரும் இந்தத் தொகுதியில் வசித்தாலும், கட்சிகளைத் தாண்டிய மத ரீதியான அரசியல் தான், இங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.

இந்தத் தொகுதியை இதுவரை வென்று வந்துள்ள காங்கிரஸ் கட்சியும், சி.பி.எம்.மும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால் மீண்டும் தங்களுக்கே வெற்றி என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி உள்ளது. திமுகவுக்கும் ஓரளவு செல்வாக்கு உண்டு.

பாஜகவுக்கு விளவங்கோடு தொகுதியில் தனிப்பட்ட வாக்கு வங்கியும் செல்வாக்கும் உள்ளதால் அவர்களது பிரச்சாரமும் களைகட்டியுள்ளது.

விஜயதாரணியின் பிரச்சாரம், பாஜக வேட்பாளருக்கு எந்த வகையில் பலன் அளிக்கும் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகே தெரியவரும்.

4 பிரதான கட்சிகள் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், பாஜக இடையே தான் நிஜமான போட்டி.

– பி.எம்.எம்.

You might also like