அமைச்சருக்கு எதிராக 400 வேட்பாளர்கள்!

ராஜபுத்திர சமூகத்தினர் அதிரடி

மத்திய அமைச்சர் ரூபாலா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், ராஜபுத்திர மன்னர்கள் குறித்து அவதூறாகப் பேசினார்.

’’முன்னாள் ‘மகாராஜாக்கள்’ (ராஜபுத்திர மன்னர்கள்) ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து அவர்களுடன் குடும்பப் பிணைப்புகளை உருவாக்கினர்’’ என்று அந்தக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

’’ராஜபுத்திர குடும்பத்தினர், தங்கள் மகள்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், தலித் சமூகம், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பணிந்து போகவில்லை’’ என்றும் திருவாய் மலர்ந்தார், ரூபாலா.

அவரது சர்ச்சைக்குரிய கருத்தால், குஜராத்தில் உள்ள ராஜபுத்திர சமூகத்தினர் கொதித்து போய் உள்ளனர்.

’’ஆபரேஷன் ரூபாலா’’ எனும் பெயரில் அவருக்கு எதிராக, அந்த சமூகத்தினர், குஜராத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபுத்திர சமூக மூத்தத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராஜ்கோட்டில் நடந்தது.

’ராஜ்கோட்டில் போட்டியிடும் அமைச்சர் ரூபாலாவை எதிர்த்து, 400 வேட்பாளர்களை நிறுத்துவது’ என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வெள்ளிவிழா கண்ட சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உடல்நலம் சரி இல்லாததால், இனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

நேரு குடும்பத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 2-வது நபர் சோனியா.

இதற்கு முன்பு அவரது மாமியார், இந்திரா காந்தி, 1964-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 1967-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் இரண்டரை ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

கவலையில் மேனகா

இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா. சஞ்சய் இறந்த பின், மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குடும்பத்தில் இருந்து பிரிந்தார்.

காங்கிரசின் ஜென்ம விரோதியான பாஜகவில் மேனகாவும், அவர் மகன் வருணும் ஐக்கியமானார்கள். இருவருக்கும் எம்.பி.பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக.

இந்த முறை உத்தரபிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் மேனகாவுக்கு டிக்கெட் அளித்துள்ள பாஜக தலைமை, வருணை நட்டாற்றில் விட்டுள்ளது.

வருண், உ.பி.யில் உள்ள பிலிபட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 3 முறை எம்.பி.ஆனவர்.

அண்மைக்காலமாக அவர் பாஜக தலைமையை விமர்சித்து வந்தார். எனவே, இந்த முறை வருணுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் கவலையில் ஆழ்ந்துள்ளார், மேனகா.

இது குறித்து மேனகாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ’வருணுக்கு சீட் வழங்காதது குறித்து எனக்கு ஆச்சர்யமும் இல்லை. வருத்ததும் இல்லை’ என விரக்தியுடன் பதிலளித்தார்.

ஒரே தொகுதியில் மோதும் ‘மாஜி’ முதலமைச்சர்கள்:

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ்காரர். இந்திரா, ராஜீவுடன் நெருக்கமாக இருந்தவர்.

காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், அதில் இருந்து விலகி, இரு ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக ஆசாத் கட்சியை ஆரம்பித்தார். இந்த தேர்தலில் ஆசாத், அனந்த்நாக்- ராஜவுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். இவரும் காஷ்மீர் முதலமைச்சராக இருந்துள்ளார். ஒரே தொகுதியில் இரு முதலமைச்சர்கள் மோதுவது, இதுதான் முதன் முறையாக இருக்கும்.

ராத்திரியில் பிரச்சாரம்

நாட்டின் மிகச்சிறிய மக்களவைத் தொகுதி லட்சத்தீவு. 57 ஆயிரம் வாக்காளர்கள் தான் உள்ளனர். பெரும்பாலும் முஸ்லிம்கள். இப்போது ரமலான் காலம் என்பதால், இஸ்லாமியர்கள் நோன்பு முடிந்து இரவில் தான் வெளியே வருவார்கள்.

இதனால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், ராத்திரியில் தான் வாக்கு சேகரிக்கிறார்கள். ஏராளமான வாக்காளர்கள் பல்வேறு தீவுகளில் வசிப்பதால், படகுகளை வாடகைக்கு எடுத்து, வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.

– பி.எம்.எம்.

You might also like